
மருத்துவமனைகள் தோறும் ஆக்ஸிஜன் இருப்பை பராமரிப்பது தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு புதிய உத்தரவு வெளியிட்டுள்ளது.
சீனாவில் மீண்டும் எழுந்திருக்கும் கரோனா புதிய திரிபு காரணமாக, பல்வேறு நாடுகளிலும் பெருந்தொற்று பரவல் குறித்தான அச்சங்கள் எழுந்திருக்கின்றன. இவற்றின் மத்தியில் இந்தியாவிலும் உரிய தடுப்பு மற்றும் தவிர்ப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
கரோனா பரவலின் இரண்டாவது அலையின்போது, இந்தியா பெரும் பாதிப்புக்கு ஆளானது. குறிப்பாக மருத்துவமனைகளில் போதுமான அளவுக்கு உயிர்காக்கும் மருத்துவ ஆக்ஸிஜன் இல்லாததால் ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்த மருத்துவ அவசர நிலையை எதிர்கொள்ள முடியாது, மத்திய மற்றும் மாநில அரசுகள் தடுமாறின.
தற்போது மீண்டும் கரோனா புதிய திரிபின் பரவல் அதிகரித்துள்ளதால், மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவற்றின் அங்கமாக, மாநிலங்களில் செயல்படும் ஆக்சிஜன் ஆலைக்கான கண்காணிப்பு, மருத்துவமனை வளாகத்தில் போதுமான அளவுக்கு திருவ மருத்துவ ஆக்ஸிஜன் இருப்பை பராமரித்தல், அவற்றை நோயாளிகளுக்கு கொண்டு செல்வதற்கான சிலிண்டர்களின் எண்ணிக்கை மற்றும் சுவாச கருவிகளின் பராமரிப்பு.. உள்ளிட்டவற்றை உறுதி செய்யுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசின் இந்த ஏற்பாடுகளுக்கு அப்பால், பொதுமக்கள் மத்தியிலான விழிப்புணர்வும், ஒத்துழைப்பும் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.