நீட் தேர்வுக்கு ஒத்துழைப்பு: 

முதல்வர்களுக்கு மத்தியக் கல்வி அமைச்சர் கடிதம்

நீட் தேர்வுக்கு ஒத்துழைப்பு: முதல்வர்களுக்கு மத்தியக் கல்வி அமைச்சர் கடிதம்

நாளை (செப்டம்பர் 12) நாடு முழுவதும் 3,858 மையங்களில் நடைபெறவுள்ள நீட் மருத்துவக் கல்வி பொதுத் தேர்வுக்கு, நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு தருமாறு மாநில முதலமைச்சர்களுக்கு மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். தேர்வை வெற்றிகரமாக நடத்த மாநிலத் தலைமைச் செயலாளர்கள், காவல் துறைத் தலைவர்களுக்கு உரிய கட்டளைகளைப் பிறப்பிக்க வேண்டும் என்றும் அக்கடிதத்தில் அவர் கோரியிருக்கிறார்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் சித்தா, யுனானி, ஹோமியோபதி, ஆயுர்வேதம் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த முறை நீட் தேர்வை எழுத நாடு முழுவதும் 16.14 லட்சம் பேர் பதிவுசெய்துள்ளனர். பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரையில் தேர்வு நடைபெறும். ஆனால், அவரவருக்குக் குறிப்பிட்டுள்ள நேரத்தில் மாணவர்கள் தேர்வுக்கூடத்துக்கு வந்துவிட வேண்டும். அனைத்து மாணவர்களும் ஒரே நேரத்தில் வருவதால் நெரிசல் ஏற்படக் கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு. தேர்வு நடைபெறும் மையங்களை, தேர்வு தொடர்பான வேலைகளுக்காக செப்டம்பர் 11 முதல் 13 வரையில் திறந்து வைப்பதை உறுதி செய்யுமாறு அனைத்துத் தலைமைச் செயலர்களுக்கும், உயர் கல்வித் துறைச் செயலர் அமித் கரே கடிதம் மூலம் வலியுறுத்தியிருக்கிறார்.

கரோனா நோய்த்தொற்று காரணமாக எந்த ஊரிலாவது மக்கள் நடமாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால், நீட் தேர்வுக்காக மாணவர்கள் வைத்திருக்கும் அனுமதி, அடையாள அட்டைகளையே அப்பகுதியில் செல்வதற்கான சிறப்பு அனுமதிச் சீட்டாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

எந்த மாணவரும் தேர்வுக் கூடத்துக்குள் பிற்பகல் 1.30 மணிக்குப் பிறகு அனுமதிக்கப்பட மாட்டார். தேர்வுக்கூட மையத்தை முதல்நாளே மாணவர்கள் சென்று பார்த்து, இடத்தையும் தொலைவையும் வாகன வசதிகளையும் தெரிந்துகொள்வது நல்லது என்ற யோசனை கூறப்பட்டிருக்கிறது.

வதந்தியை நம்ப வேண்டாம்

'நீட் தேர்வு வினாத்தாள்கள் கசிந்துவிட்டன. எங்களை அணுகினால் வினாத்தாளை அனுப்பி வைக்கிறோம். இதற்குப் பணம் கொடுங்கள்' என்று யாராவது கேட்டால், நம்பி ஏமாற வேண்டாம் என்றும் தர்மேந்திர பிரதான் அந்தக் கடிதத்தில் அறிவுறுத்தியிருக்கிறார்.

x
காமதேனு
kamadenu.hindutamil.in