சென்னையில் சிக்கிய 3 பேர் பயங்கரவாதிகளுடன் தொடர்பா?- மத்திய உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை

சென்னையில் சிக்கிய 3 பேர் பயங்கரவாதிகளுடன் தொடர்பா?- மத்திய உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை

சென்னையில் சட்டவிரோதமாக சிம் பாக்ஸ் பயன்படுத்தி வெளிநாட்டு அழைப்புக்களை உள்ளூர் அழைப்புக்களாக மாற்றி மோசடியில் ஈடுபட்ட 3 பேரை பிடித்து ஐபி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை அமைந்தகரை எம்.எம் காலனி மற்றும் பி.பி தோட்டம் பகுதியில் இருந்து அதிகப்படியான வெளிநாட்டு அழைப்புகள் செல்வதாகவும், ஆனால் அவை உள்ளூர் அழைப்புகள் போல் காட்டுவதால் தங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக மத்திய உளவுத்துறை (ஐ.பி) அதிகாரிகளுக்கு பி.எஸ்.என்.எல் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த மோசடியால் தங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பி.எஸ்.என்.எல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஐ.பி அதிகாரிகள் இன்று மாலை அமைந்தகரை போலீஸாரின் உதவியுடன் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு பூட்டியிருந்த வீட்டில் சோதனை நடத்தினர். சோதனையில் அந்த வீட்டில் இருந்து 4 சிம் பாக்ஸ் மற்றும் 60-க்கும் மேற்பட்ட சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து வீட்டின் உரிமையாளரிடம் விசாரித்த போது ஜாகீர் ஹுசைன் என்பவர் அந்த வீட்டை வாடகைக்கு எடுத்ததாக தகவல் தெரிவித்துள்ளார்.

பின்னர் வீட்டு உரிமையாளர் மூலம் ஜாகீர் ஹுசைனை ஐ.பி அதிகாரிகள் செல்போனில் தொடர்புகொண்டு அவரை வரவழைத்து சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பெரியமேடு பகுதியில் வசித்து வரும் தனது நண்பர்களுக்காக இந்த வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொடுத்ததாக ஜாகீர் ஹுசைன் தெரிவித்ததை அடுத்து ஐபி அதிகாரிகள் ஜாகீர்உசேனை பெரியமேட்டிற்கு அழைத்து சென்றனர். அங்கு ஊத்துக்காட்டான் தெருவில் வசித்து வந்த ஜாகீர் ஹுசைனின் நண்பர்களான சுனைத் மற்றும் ஷெரிஃப் ஆகிய இருவரை ஐ.பி அதிகாரிகள் பிடித்தனர்.. பின்னர் பிடிபட்ட 3 பேரையும் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் ஒப்படைத்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கெனவே கோவை மற்றும் கர்நாடக மாநிலம் மங்களூர் ஆகிய இடங்களில் பயங்கரவாதிகளால் வெடிகுண்டு வெடிப்புச் சம்பவங்கள் அரங்கேறியுள்ள நிலையில், சென்னையில் சிம் பாக்ஸ் பயன்படுத்தி வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்புகள் போல மாற்றி மோசடியில் ஈடுபட்டு வந்த சம்பவம் ஏதேனும் சதித்திட்டங்களை தீட்டும் செயலா, என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் பிடிபட்ட மூவரும் ஏதேனும் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் உள்ளவர்களா? என்பது குறித்து ஐ.பி அதிகாரிகள் மற்றும் சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி மூவரும் வாடகைக்கு எடுத்து தங்கியிருந்த வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in