டிஜிட்டல் ஓட்டு: என்ஆர்ஐ-க்களும் வாக்களிக்க ஏற்பாடு!

உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
டிஜிட்டல் ஓட்டு: என்ஆர்ஐ-க்களும் வாக்களிக்க ஏற்பாடு!

வெளிநாடுவாழ் இந்தியர்கள்(என்ஆர்ஐ), ஆன்லைன் மூலம் வாக்களிப்பதற்கான வழிமுறைகளைப் பரிசீலித்துவருவதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

பின்னணி என்ன?

வெளிநாடுவாழ் இந்தியர்கள் தபால் வாக்கு முறை மூலம் வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டும் எனக் கோரி ஐக்கிய அரபு அமீரகத்தில் மருத்துவராகப் பணிபுரிந்துவரும் வி.பி.ஷம்ஷீர் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இதே கோரிக்கையுடன் வேறு சில மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.

இந்த வழக்குகளை தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு விசாரித்துவருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஹரிஸ் பீரான் ஆஜரானார். மத்திய அரசின் சார்பில் தலைமை வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணி ஆஜரானார்.

என்ன சொல்கிறது உச்ச நீதிமன்றம்?

தொலைதூரத்தில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்குத் தபால் வாக்கு வசதி வழங்கப்படுவதற்கும், விருப்பத்தின் பேரில் வெளிநாடுகளில் வசித்துவருபவர்களுக்கு அந்த வசதியை வழங்குவதற்கும் வித்தியாசம் உள்ளது என்றே உச்ச நீதிமன்றம் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தது. எனினும், புலம்பெயர்ந்து வாழும் தொழிலாளர்கள் தேர்தல் காலத்தில் சொந்த ஊருக்குத் திரும்பி வாக்களிப்பது சிரமமானதுதான் எனத் தற்போது ஒப்புக்கொண்டிருக்கிறது.

வெளிநாடுவாழ் இந்தியர்களில், கேரளம், தமிழகம், வட இந்திய மாநிலங்கள் போன்றவற்றைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமானது. தேர்தல் அரசியலில் முடிவுகளைத் தீர்மானிக்கும் சக்திகளாக இவர்கள் இருப்பார்கள் எனக் கருதப்படுகிறது.

சட்டத்திருத்த மசோதா

இவ்விஷயம் குறித்து மத்திய அரசுக்குத் தெரியும் என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. குறிப்பாக, வெளிநாடுவாழ் இந்தியர்கள் தங்கள் பிரதிநிதிகள் மூலம் வாக்களிக்க அனுமதிக்கும் வகையில், 2017-ல் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவந்தது. இந்தச் சட்டத்தின் 20-A பிரிவு, வெளிநாடுவாழ் இந்தியர்கள் தங்கள் சொந்தத் தொகுதிகளுக்கு நேரில் சென்று வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

இது நியாயமற்ற கட்டுப்பாடு எனக் கருதுவதாகவும், அதை நீக்குவதாகவும் அந்தச் சட்டத்திருத்த மசோதாவில் மத்திய அரசு குறிப்பிட்டிருந்தது. எனினும், கடந்த மக்களவைத் தேர்தலையொட்டி 16-வது மக்களவை கலைக்கப்பட்டுவிட்டதால் அந்த மசோதா காலாவதியாகிவிட்டது. இதையும் யு.யு.லலித் தலைமையிலான அமர்வு நேற்று சுட்டிக்காட்டியது. அத்துடன், டிஜிட்டல் முறையில் வாக்களிப்பதற்கான வழிவகைகள் குறித்து மத்திய அரசு பரிசீலிக்கிறதா என்றும் கேள்வி எழுப்பியது. அது குறித்துப் பரிசீலிக்கப்படுவதாக தலைமை வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணி தெரிவித்தார்.

வெளிநாடுவாழ் இந்தியர்கள், தாங்கள் இருந்த இடத்திலிருந்தே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும் எனும் நிலைப்பாடு தேர்தல் ஆணையத்துக்கும் இருக்கிறது. இதுதொடர்பான அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் ஏற்கெனவே தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in