கலைஞரின் பேனா நினைவுச்சின்னம் அமைக்க மத்திய அரசு 'க்ரீன்' சிக்னல்

கலைஞரின் பேனா நினைவுச்சின்னம் அமைக்க மத்திய அரசு 'க்ரீன்' சிக்னல்

சென்னை மெரினாவில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு அருகே பேனா நினைவுச்சின்னம் அமைக்க மத்திய அரசு முதற்கட்ட அனுமதியை வழங்கியுள்ளது.

சென்னை மெரினாவில் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்திற்கு அருகே வங்க கடலில் 80 கோடி ரூபாய் செலவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்பட உள்ளது. இதில் பேனா பீடம், கடலுக்கு மேலே பாதசாரி பாதை, கடற்கரை மற்றும் நிலத்திற்கு மேலே அமையவுள்ள பின்னல் பாலம், கடற்கரைக்கு மேலே பாதசாரி பாதை, நினைவிடத்தில் இருந்து பாலம் வரை நடைபாதை என மொத்தம் 8,551 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், சென்னை மெரினாவில் கருணாநிதி நினைவிடம் அருகே கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைக்க மத்திய அரசு முதற்கட்ட அனுமதி அளித்துள்ளது. அதன்படி, சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு, சுற்றுச்சூழல் மேலாண்மை மதிப்பீட்டு அறிக்கையானது, கடல்சார் ஆய்வுகள் உட்பட துறைமுகம் தொடர்பான கட்டமைப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் மீனவர் சமூகத்தின் கருத்துகளைக் கேட்டு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சுழல் அனுமதியை பெற்று அடுத்த கட்டப் பணியை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்திய பாரம்பரிய அம்சங்களை சித்தரிக்கும் வகையில் உள்ளூர் கட்டிடக்கலை மற்றும் மையக் கருத்துகளில் இருந்து வடிவமைப்பு தனிமைப்படுத்தப்பட்டதாக இருக்கக்கூடாது என்றும், சுனாமி மற்றும் சூறாவளிகளின் போது அவசரகால வெளியேற்றத்திற்கான விரிவான திட்டம் மற்றும் தேவையான உள்கட்டமைப்புகளுடன் உருவாக்கப்பட்ட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in