மத்திய பட்ஜெட் யானை பசிக்கு சோளப்பொரி: குறுந்தொழில் முனைவோர்கள் அதிருப்தி

பட்ஜெட் 2023
பட்ஜெட் 2023மத்திய பட்ஜெட் யானை பசிக்கு சோளப்பொரி: குறுந்தொழில் முனைவோர்கள் அதிருப்தி

`மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் யானை பசிக்கு சோளப்பொரி போல் உள்ளது' என குறுந்தொழில் முனைவோர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

மக்களவையில் இன்று தாக்கலான மத்திய பட்ஜெட்டில் குறுந்தொழில் முனைவோர்கள் எதிர்பார்ப்பு தொடர்பான அறிவிப்புகள் இடம்பெறவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து கோவை மாவட்ட பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்க (கோப்மா) தலைவர் மணிராஜ் கூறுகையில், ``தொழில்கள் மீது கரோனா பேரிடர் ஏற்படுத்திய தொழில், பொருளாதார மந்தம் இன்னும் மறையவில்லை. இந்நிலையில் குறுந்தொழில்கள் மீதான வங்கி கடன், கரோனா கால கடன் மீதான வட்டி குறைப்பு தொடர்பான அறிவிப்பில்லாதது ஏமாற்றம் தருகிறது.

சிறு, குறு தொழில்கள் புத்துயிர் பெற 9 ஆயிரம் கோடி ஒதுக்கீடு என்பது யானை பசிக்கு சோளப்பொரி போல் உள்ளது. தனி நபர் வருமானம் வரி விலக்கு 7 லட்சம் என்பது வரவேற்கத்தக்கது'' என்றார்.

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் சங்க மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறுகையில், ``குறு, சிறு தொழில்களுக்கு ஜிஎஸ்டி பிரச்சினைகளுக்கு தீர்வு, தனி அமைச்சகம் உள்ளிட்ட அறிவிப்பு இல்லை. மூலப்பொருள்களின் விலை நிர்ணயம் கமிட்டி அறிவிப்பு இல்லை.  2020 முதல் 2022 வரை ஏற்பட்ட தொழில் நெருக்கடியில் இருந்து குறுந்தொழில்கள் மீண்டுவர வங்கியில் கடன் பெற்ற குறு, சிறு தொழில் முனைவோர்களுக்கு அபராத வட்டி, கரோனா காலத்துக்கான வட்டி தள்ளுபடி, தனி கடன் திட்ட அறிவிப்பில்லை. குறு, சிறு தொழில்களை மேம்படுத்த எவ்விதத்திலும் தனிக்கவனம் செலுத்தப்படவில்லை'' என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in