சிக்கலில் திமுக... உதயநிதியை வளைக்கும் வியூகத்தில் மத்திய சக்திகள்?

அமைச்சர் உதயநிதியுடன் ஜாபர் சாதிக்
அமைச்சர் உதயநிதியுடன் ஜாபர் சாதிக்

பல்லாயிரம் கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கியிருக்கும் ஜாபர் சாதிக் விவகாரம், க்ரைம் வகையறாவுக்கு அப்பால் அரசியல் முலாமுக்கும் ஆளாகி வருகிறது. ஆளும் கட்சி நிர்வாகியாக அவர் இருந்தது முதல் கோலிவுட்டில் நிதியைக் கொட்டியது வரை பலவற்றின் பின்னணியிலும் மத்திய விசாரணை அமைப்புகள் தீவிரமாக தோண்டி வருகின்றன. அவற்றில் ஒன்றாக அமைச்சர் உதயநிதியை மையமிட்டு காய் நகர்த்தப்படுவதாகவும் பட்சிகள் பரபரக்கின்றன.

‘அமைச்சர் உதயநிதியின் அறக்கட்டளைக்கு ஜாபர் சாதிக் நிதி வழங்கியிருக்கிறார்; அதை அவர்களால் மறுக்க முடியுமா?’ இப்படி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பகிரங்கமாய் எழுப்பிய கேள்வி பரபரப்பை உருவாக்கியது. இதே போன்று பாஜக சார்பில் யூடியூப் சானல்களில் முழங்கும் பலரும், உதயநிதியுடன் ஜாபர் சாதிக்கை நேரிடையாக முடிச்சிடுகின்றனர். போதைக்கடத்தல் மூலம் கோடிகளில் கொழித்த ஜாபர் சாதிக் அவற்றை கோலிவுட்டில் முதலீடு செய்ததாகவும், அவற்றில் ஒன்றாக கிருத்திகா உதயநிதியின் படங்களின் பின்னே ஜாபர் சாதிக் முதலீடு இருந்ததாகவும் அவர்கள் கொளுத்திப் போட்டிருக்கிறார்கள்.

ஜாபர் சாதிக்
ஜாபர் சாதிக்

திமுகவின் அயலக அணி நிர்வாகியாக ஜாபர் சாதிக் இருந்ததும், பல்வேறு நிவாரண நிதி வழங்கலில் பங்களித்ததும், திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டதும், தொடர்ந்து அரசியல் மற்றும் சினிமா திரைத்துறையினருடன் ஊடாடியதும் வெளிப்படையானவை. அவர்களின் எவருக்கும் ஜாபர் சாதிக்கின் உண்மையான பின்னணி தெரிய வாய்ப்பில்லையா என அதிமுக மற்றும் பாஜவினர் கேட்கும் கேள்விகளுக்கும் இன்னமும் பதில் இல்லை.

ஹவாலாவில் தொடங்கி போதைப்பொருள் கடத்தல் வரை நிழலான பல்வேறு நடவடிக்கைகளில் ஜாபர் சாதிக் ஈடுபட்டு வந்தது குறித்து, இந்த அரசியல் மற்றும் சினிமா உலகப் புள்ளிகள் எவருமே அறியாதது வெகுஜனத்தை ஆச்சரியத்தில் தள்ளக் கூடியது. இடையில் ஓரிருமுறை கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களுக்காக ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டதாகவும், அரசியல் தலையீடு காரணமாக அவற்றில் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் வேறு சிலர் பேட்டியளித்து வருகின்றனர். நிஜமாகவே ஜாபர் சாதிக் அவ்வாறு கைதானாரா அப்படியெனில், அவர் மத்திய மற்றும் மாநில உளவு ஏஜென்சிகளின் சந்தேக மற்றும் கண்காணிப்பு வட்டத்தில் அதன் பின்னர் சிக்காதது எப்படி? அமெரிக்கா, நியூசிலாந்து என வெளிநாடுகளில் இருந்து தகவல் வரும் வரை ஜாபர் சாதிக்கை இந்திய ஏஜென்சிகள் கோட்டை விட்டதும் எப்படி?... என்பதான கேள்விகளுக்கும் பதில் இல்லை.

ஜாபர் சாதிக்குடன் நெருக்கமாக இருந்த இயக்குநர் அமீர் தற்போது, ஜாபர் சாதிக்கின் நிழல் விவகாரங்கள் குறித்து அறவே அறிந்ததில்லை என சாதிப்பதோடு, அதிகாரிகள் விசாரணைக்கு எப்போது வேண்டுமானாலும் ஆஜராகத் தயார் என முதல் ஆளாய் முன்வந்திருக்கிறார். அமீர் தவிர்த்து ஜாபர் சாதிக்குடன் அரசியல் மற்றும் சினிமாவில் கொடுக்கல் வாங்கல் வைத்துக்கொண்ட மற்றவர்கள் இன்னமும் வாய்திறக்கக் காணோம். இதுவே அதிமுகவினர் வாய்க்கு அவலாகி இருக்கிறது.

ஜாபர் சாதிக் வலைப்பின்னலை தீவிரமாக விசாரிக்கும் என்சிபி, இந்த அரசியல் - சினிமா கண்ணிகளையும் ஆராய்ந்து வருகிறது. போதைக்கடத்தில் சேர்த்த கருப்பை வெள்ளையாக சலவை செய்ய சினிமா மற்றும் அரசியல் தளங்கள் உதவியதா என்ற கோணத்தில் அவர்கள் விசாரிக்கத் தலைப்பட்டிருக்கிறார்கள்.

பிடிபட்ட போதைப்பொருள் மற்றும் கடத்தல்காரர்கள் - ஜாபர் சாதிக்
பிடிபட்ட போதைப்பொருள் மற்றும் கடத்தல்காரர்கள் - ஜாபர் சாதிக்

இளம் சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் வட்டாரத்தில் அடிக்கடி நடக்கும் பார்ட்டிகள், அதில் விநியோகிக்கப்படும் போதைப்பொருட்களின் பின்னணி ஆகியவற்றையும் என்சிபி துழாவ வேண்டியிருக்கும். ஏற்கனவே ஷாருக் கான் மகனை முன்வைத்து என்சிபி மேற்கொண்ட விசாரணை, அந்த துறைக்கு எதிராகவே பூமாரங் ஆனதும் நடந்தது. தெலுங்கு - கன்னட பட உலகின் உச்ச நட்சத்திரங்கள் பங்கேற்ற போதை பார்ட்டி வழக்கு இன்னமும் இழுபறியாகவே உள்ளது.

தற்போது ஜாபர் சாதிக்கின் அரசியல், சினிமா பின்னணியை என்சிபி துழாவ நேர்ந்தால் பூதங்கள் வெளிப்படலாம். போதைக்கடத்தல் மற்றும் அதிலிருந்து கிடைத்த வருமானத்தை சுற்றுக்கு விட்டதில் சட்ட விரோத பணமோசடி என்ற கோணத்தில் அமலாக்கத்துறை, ஐஎஸ் உள்ளிட்ட பயங்கரவாத குழுக்களுக்கு நிதியளித்ததாக சொல்லப்படுவது குறித்து விசாரிக்க என்ஐஏ என சகல மத்திய விசாரணை அமைப்புகளும் களமிறங்க வாய்ப்பாகி உள்ளன.

குறிப்பாக தேர்தல் நெருக்கம் என்பதால் திமுக முதல் குடும்பத்தை சிக்க வைக்கும் வாய்ப்புக்காக பாஜக தரப்பு காத்துக்கொண்டிருக்கிறது. அப்படியான வாய்ப்பை அரசியல் அறுவடையில் பங்குபோட்டுக்கொள்ள அதிமுகவும் காத்திருக்கிறது. ஏற்கனவே உதயநிதியின் சனாதன சர்ச்சைப் பேச்சு விவகாரத்தில் இண்டியா கூட்டணிக்குள் இன்னமும் திமுகவுடன் இணக்கம் திரும்பவில்லை. ஜாபர் சாதிக் விவகாரத்திலும் திமுக தலைமையை இழுத்துவிட்டால், இண்டியா கூட்டணியை, குறிப்பாக காங்கிரஸ் கட்சியை சாடுவதற்கு பாஜகவுக்கு பெரும் வாய்ப்பு கிட்டும். அதை தவறவிடக்கூடாது என்ற மும்முரத்தில் ’லுக் அவுட் நோட்டிஸ்’ பிறப்பித்த கையோடு, ஜாபர் சாதிக்கை வலைபோட்டு தேடி வருகிறார்கள்.

இதனிடையே ஜாபர் சாதிக்கை மத்திய விசாரணை ஏஜென்சி தூக்கிவிட்டதாகவும், மறைவான இடத்தில் வைத்து விசாரித்து வருவதாகவும் சில தகவல்கள் கசிகின்றன. அதற்கெல்லாம் வாய்ப்பில்லை; வளைகுடா முதல் ஆப்பிரிக்க கென்யா வரை வெளிநாடுகளுக்கு சாதிக் பறந்திருக்கக்கூடும் அல்லது பெரம்பலூர் சாதிக் பாட்சா பாணியில் அவரது உயிருக்கு ஆபத்து விளைந்திருக்கும் என்ற இன்னொரு சுற்று களேபரத் தகவல்களும் றெக்கையடிக்கின்றன. தேர்தல் தேதி அறிவிப்பாவதற்குள் இந்த விவகாரத்தில் தீப்பிடிக்கும் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in