திடீரென உயிரிழந்த செல்போன் திருடன் தினேஷ் மனைவி கண்ணீர்: வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றினார் டிஜிபி

திடீரென உயிரிழந்த செல்போன் திருடன் தினேஷ் மனைவி கண்ணீர்: வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றினார் டிஜிபி

குற்றம்சாட்டுக்குள்ளான பெண் உதவி ஆய்வாளர் உட்பட 4 காவலர்கள் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்ட நிலையில், வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை காரப்பாக்கத்தை சேர்ந்த ஸ்டீபன் கடந்த 20-ம் தேதி மாநகர பேருந்தில் துரைப்பாக்கம் சென்று கொண்டிருந்தார். அப்போது, பெரம்பூரை சேர்ந்த தினேஷ்குமார்(26) தனது கூட்டாளி ராமசந்திரனுடன் சேர்ந்து ஸ்டீபன் செல்போனை பறித்து கொண்டு தப்பியோட முயன்றார். அப்போது பொதுமக்கள் உதவியுடன் தினேஷை மட்டும் பிடித்து துரைப்பாக்கம் சுங்கச்சாவடி அருகே பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களிடம் ஸ்டீபன் ஒப்படைத்தார். பிடிப்பட்ட தினேஷிடம் போலீஸார் விசாரணை நடத்தி அவரது மனைவி கவுசல்யா மூலம் ராமசந்திரனிடம் இருந்து திருடிய செல்போனை மீட்டு ஸ்டீபனிடம் ஒப்படைத்தனர்.

செல்போன் கிடைத்து விட்டதால் புகார் வேண்டாமென ஸ்டீபன் கூறியதன் பேரில் போலீஸார் தினேஷ்குமாரிடம் எழுதி வாங்கி கொண்டு அவரை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். அங்கிருந்து வீட்டிற்கு வந்த தினேஷ்குமாருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதை அடுத்து உறவினர்கள் அவரை அருகிலிருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு தினேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். துரைப்பாக்கம் காவல்துறையினர் தாக்கியதாயேயே தினேஷ் உயிரிழந்ததாக அவரது சகோதரர் செந்தில்குமார் திருவிக நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்த நிலையில், எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் லட்சுமி நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

இதனிடையே, தினேஷ் விவகாரத்தில் சிக்கிய துரைப்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கலைசெல்வி, ராஜாமணி மற்றும் காவலர்கள் சந்திரசேகரன், பார்த்தசாரதி ஆகிய 4 பேரை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றி காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். மேலும் போலீஸ் விசாரணையின் போது மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதால் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே உயிரிழந்த தினேஷ் குமாரின் மனைவி கவுசல்யா இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "போலீஸார் தாக்கியதால் தான் தனது கணவர் தினேஷ் உயிரிழந்தார். இதில் சம்மந்தப்பட்ட காவல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அவரை தொடர்ந்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளர் சவுந்தர்ராஜன், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு உடனே 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். தினேஷ் குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in