
திருச்செந்தூர் - திருநெல்வேலி ரயில் போக்குவரத்து சேவையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அதனை உற்சாகமாக கொண்டாடிய ரயில் பயணிகள் ரயில்வே பணியாளர்களுக்கும், பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கி கௌரவித்தனர்.
திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலிக்கு முதன் முதலாக கடந்த 1923-ம் ஆண்டு பிப்ரவரி 23-ம் தேதி ரயில் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டது. இந்த ரயில் போக்குவரத்து சேவையின் நூறாவது ஆண்டு விழாவை முன்னிட்டு இன்று நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.
ஆறுமுகநேரி ரயில்வே வளர்ச்சி குழு ஒருங்கிணைப்பாளர் தங்கமணி தலைமையில் திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு புறப்பட்ட பயணிகள் ரயில் பூ மாலைகளுடன் அலங்கரிக்கப்பட்டது. மேலும் ரயில் ஓட்டுநர்களுக்கும், ரயில்வே பணியாளர்களுக்கும் பொன்னாடை அணிவித்து இனிப்புகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து ரயிலில் பயணம் செய்த பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி செல்லக்கூடிய காயல்பட்டினம், ஆறுமுகநேரி, குரும்பூர் மற்றும் நாசரேத் உள்ளிட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் ரயில் சேவை நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ரயிலுக்கு உற்சாகமாக வரவேற்பளித்து அந்தந்தப்பகுதி மக்கள் கொண்டாடினர்.