7 மாத கன்றுக்குட்டியை அடித்துக் கொல்லும் முதியவர் : மதுரையில் வைரலாகும் வீடியோ

வைரலாகும் சிசிடிவி காட்சி
வைரலாகும் சிசிடிவி காட்சி

மதுரையில் 7 மாதக் கன்றுக்குட்டியை முதியவர் ஒருவர் அடித்துக் கொல்லும் சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது.

மதுரை மாநகர் கிழக்குவெளி வீதியைச் சேர்ந்தவர் சிக்கந்தர் சேக் அப்துல்லா. இவர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் குமாஸ்தாவாக பணிபுரிந்து வருகிறார். ஆடு, மாடுகள் வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட இவர், தனது வீட்டின் அருகே போதிய இட வசதி இல்லாததால், வைகை ஆற்றின் தென்கரைப் பகுதியில் அவற்றை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில், அப்துல்லா வளர்த்து வந்த ஏழு மாத பசுங்கன்று கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்து கிடந்தது. இது குறித்து அருகில் விசாரித்த போது, நெல்பேட்டை பகுதியைச் சேர்ந்த காதர் சுல்தான்(65) என்பவர் தாக்கியது தெரியவந்தது. இதுகுறித்து அவரிடம் சிக்கந்தர் சேக் அப்துல்லா கேட்டதற்கு, தான் வளர்த்து வரும் பசு மாட்டிடம், சேக் அப்துல்லா வளர்த்து வந்த பசுங்கன்று தினசரி வந்து பால் குடித்துவிட்டு சென்றதால் கொலை செய்ததாக கூறினார். மேலும், இதனை வெளியே சொன்னால் உன்னையும் கன்றுக்குட்டியை அடித்துக் கொன்றது போல் கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து விளக்குத்தூண் காவல்நிலையத்தில், சிக்கந்தர் சேக் அப்துல்லா புகார் அளித்தார். இதன் பேரில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விலங்குகள் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காதர் சுல்தானை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்நிலையில், காதர் சுல்தான், கன்றுக்குட்டியை அடித்துக் கொல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in