சென்னை வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் தப்பிச் செல்லும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியீடு

முக்கியக் குற்றவாளி முருகன்
முக்கியக் குற்றவாளி முருகன்

சென்னை அரும்பாக்கம் தனியார் வங்கியில் கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்கள் தப்பிச் செல்லும் சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் வெளியிட்டு உள்ளனர்.

சென்னை அரும்பாக்கம் பெடரல் வங்கியின் கிளை நிறுவனமான பெட் பேங்க் கோல்டு லோன்ஸ் வங்கியில் நேற்று நண்பகல் கொள்ளைச் சம்பவம் நடந்தது. இந்நிறுவனத்தில் சென்னைவாசிகள் பலரும் தங்க நகையை அடகுவைத்துக் கடன் பெற்றுள்ளனர். இந்த வங்கியிலேயே வாடிக்கையாளர் சேவை மையத்தில் மேளாளராக பணிசெய்த முருகன் என்பவர் சூர்யா, பாலாஜி என்ற தன் இரு நண்பர்களையும் பயன்படுத்தி கொள்ளையடித்தது தெரியவந்தது.

இந்தக் கும்பல் வங்கிக் காவலாளிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, வங்கி ஊழியர்கள், மேலாளரைக் கத்தியைக் காட்டி மிரட்டிக் கட்டிப்போட்டு இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது.

மூன்றுபேர் கொண்ட இந்த கொள்ளைக் கும்பல் வங்கியில் இருந்து 32 கிலோ நகைகளை எடுத்துச் சென்றது. இவற்றின் மதிப்பு 20 கோடியாகும். இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் கைதுசெய்ய நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வங்கிக்கொள்ளைத் தொடர்பாக ஒருவரைப் பிடித்து தனிப்படை போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்நிலையில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் தப்பிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. ரசாக் கார்டன் பகுதியில் இருந்து அங்கிருந்து 500 மீட்டர் தொலைவில் ஈ.வெ.ரா பெரியார் சாலை வருகிறது. அந்த சாலை வழியாகவே கொள்ளையர்கள் தப்பிச் செல்கின்றனர். அதில் முதலில் வங்கியில் பணிபுரிந்த முருகன் ஒரு வாகனத்திலும், அவரைப் பின்தொடர்ந்து மற்ற இரு கொள்ளையர்களும் ஒரே மோட்டார் சைக்கிளில் பின்னால் செல்கின்றனர். பொதுமக்கள் இவர்கள் குறித்துத் துப்புகொடுத்தாலும், பிடிக்கும் காவலர்களுக்கும் ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் இந்த கொள்ளையர்கள் பைக்கில் செல்லும் சாலைகளின் அடிப்படையிலும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும் பணிகளும் நடந்துவருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in