சிறுமிகளின் ஆபாசப்படம் பதிவேற்றம்: இண்டர்போல் அதிகாரிகள் தகவலால் மணப்பாறை வாலிபர் வீட்டில் சிபிஐ சோதனை

சிறுமிகளின் ஆபாசப்படம் பதிவேற்றம்: இண்டர்போல் அதிகாரிகள் தகவலால் மணப்பாறை வாலிபர் வீட்டில்  சிபிஐ சோதனை

மணப்பாறை பகுதியைச் சேர்ந்த ஒருவர் இணையத்தில்  சிறுமிகளின் ஆபாசப் படங்களை பதிவேற்றி இருப்பதை அறிந்து இன்று அவரது வீட்டில்  சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமூக ஊடகத்தின் பல்வேறு தளங்களில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை வெளியிட்ட, பரிமாறிய நபர் ஒருவர்  குறித்த தகவல் சிங்கப்பூர் இண்டர்போல் அதிகாரிகள் வழியாக சிபிஐக்கு கிடைத்தது.  அந்த நபர் திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள பூமாலைபட்டி பகுதியைச் சேர்ந்த ராஜா என்பதை கண்டுபிடித்த சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் அவரது  வீட்டில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராஜா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் வேலை பார்த்து வந்த நிலையில் தற்போது இவர் திருப்பூரில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அவரது வீட்டில் 6 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள், மணப்பாறை போலீஸார்  உதவியுடன், திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்ற அனுமதியுடன் விசாரணை மற்றும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.  

இந்த ராஜா,   18 வயதுக்குட்பட்டவர்களின் ஆபாச வீடியோக்களை  வெளிநாடுகளுக்கு அனுப்பியதன் அடிப்படையில் எழுந்த புகாரின் பேரில்தான் இந்த விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.  18 வயதுக்குட்பட்ட சிறுமிகளின் ஆபாச படங்கள் எங்கிருந்து  அவருக்கு வந்தது, அவர் எதற்காக அனுப்பினார் என்பது குறித்தும் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in