சிபிசிஐடி விசாரணையில் நம்பகத்தன்மை இல்லை: கள்ளக்குறிச்சி மாணவியின் தாய் பரபரப்பு குற்றச்சாட்டு

சிபிசிஐடி விசாரணையில் நம்பகத்தன்மை இல்லை: கள்ளக்குறிச்சி மாணவியின் தாய் பரபரப்பு குற்றச்சாட்டு

சிபிசிஐடி விசாரணையில் நம்பகத்தன்மை இல்லை.எனவே, எனது மகள் வழக்கு விசாரணையை தனிக்குழு ஒன்றை அமைத்து விசாரிக்க வேண்டுமென கள்ளக்குறிச்சி மாணவியின் தாய் செல்வி, டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவி மர்ம மரண வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சிபிசிஐடி விசாரணை நம்பகத்தன்மையுடன் இல்லையென்றும், தனிக்குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடவேண்டும் என மாணவியின் தாய் செல்வி சென்னை டிஜிபி அலுவலகத்தில் இன்று மனு கொடுத்தார்.

இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்," என் மகளின் மரணம் தொடர்பான விசாரணையை சிபிசிஐடி ஒருதலைபட்சமாக விசாரித்து வருகிறது. மேலும், சம்மன் எதுவும் அனுப்பாமல் எனது மகள் மரணத்தில் சம்பந்தமே இல்லாத எங்கள் உறவினர்களை மணிக்கணக்கில் காக்கவைத்து விசாரிக்கின்றனர். ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்களை விரைந்து விசாரணை முடித்து அனுப்பி வைக்கிறார்கள்" என்று அவர் குற்றம் சாட்டினார்.

மேலும்," சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணையின் போது எனது உறவினர்களிடம் மகளின் மரணம் தற்கொலை என ஒப்புக்கொள்ள வற்புறுத்துகின்றனர். எனவே, குற்றம் சாட்டப்பட்டவர்களின் செல்போன்களைக் கைப்பற்றி ஆய்வுக்கு உட்படுத்தினால் பல உண்மைகள் தெரிய வரும். ஆனால், அதற்குப் பதிலாக அதிகாரிகள் எனது உறவினர்களின் செல்போன்களை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றுள்ளனர்.

இதனால் எங்களுக்கு சிபிசிஐடியின் விசாரணையில் நம்பகத்தன்மை இல்லை. எனவே, தனியாக ஒரு குழு அமைத்து நீதிமன்றத்தின் கண்காணிப்பில், மூத்த குற்றவியல் வழக்கறிஞர் ஒருவரது மேற்பார்வையில் பாரபட்சமற்ற முறையில் புலன் விசாரணை நடத்த வேண்டும்" என்றார். இது தொடர்பாக டிஜிபியிடம் மனு அளித்துள்ளதாகவும், அடுத்ததாக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து மனு அளிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in