20 முக்கிய ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை: சூடுபிடிக்கும் ராமஜெயம் கொலை வழக்கு

20 முக்கிய ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை: சூடுபிடிக்கும் ராமஜெயம் கொலை வழக்கு

ராமஜெயம் கொலை வழக்கில் பிரபலமான  20  முக்கிய ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடைபெற இருப்பதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. 

திமுக முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேருவின் சகோதரரும்,  பிரபல தொழிலதிபருமான கே.என். ராமஜெயம் கடந்த 2012 மார்ச் 29-ம் தேதி திருச்சி தில்லைநகரில் நடைபயிற்சி சென்றபோது கடத்தி செல்லப்பட்டு திருவளர்ச்சோலை பகுதியில் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த  வழக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிபிஐ, சிபிசிஐடி என பல்வேறு கட்டங்களைக் கடந்தும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் நிலுவையிலேயே இருந்தது.

தற்போது மீண்டும்  திமுக ஆட்சி வந்தபிறகு  நீதிமன்ற உத்தரவுப்படி இதற்கென  சிறப்புப் புலனாய்வு குழு அமைக்கப்பட்டு அதன்  அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   சிறப்பு புலனாய்வு தனிப்படை எஸ்பி ஜெயக்குமார், டிஎஸ்பி மதன், இன்ஸ்பெக்டர் ஞானவேல் ஆகியோர் அடங்கிய சிறப்பு குழுவினர் வழக்கை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

மேலும், ராமஜெயம் கொலை தொடர்பாக சிறையில் உள்ள கைதிகள், குற்ற வழக்குகளில் ஈடுபட்ட சிறைக்கு வெளியில் உள்ளவர்கள், ராமஜெயம் கடத்தப்பட்ட இடத்தில் இருந்து அந்த சமயத்தில் செல்போனில் பேசியவர்கள் என 1400-க்கும் மேற்பட்ட நபர்களை அழைத்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், இவ்வழக்கில் 20 பேர் அடங்கிய இறுதிப்பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில்  தமிழகத்தையே அச்சுறுத்திய பிரபல ரவுடிகள் சுமார் 20-க்கும் மேற்பட்டோரை  கடந்த சில நாட்களாக சிறப்புப் புலனாய்வுக் குழுவினர்  தீவிரமாக விசாரித்து வருவகின்றனர்.  சில ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து ஆலோசிக்க  சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர் விமான மூலம் இன்று  திருச்சி வந்திருந்தார்.

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள சிறப்புப் புலனாய்வு குழு அலுவலகத்தில் காவல் துறையினருடன் அவர் இன்று ஆலோசனை நடத்தினார். இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்," தமிழகத்தில் உள்ள மிக முக்கிய பிரபல ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. விசாரணையில் உள்ள தகவல்களை இப்போது வெளியில்  பகிர முடியாது.

ராமஜெயம் கொலை நடந்து சுமார் 10 ஆண்டுகளாகிவிட்டது. இந்த ஆறு மாதத்தில் சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணையில் முன்னேற்றம் உள்ளது. 

ரவுடிகளிடம் விசாரணை நடத்துவதால் புதிய தகவல்கள்  இந்த கொலை வழக்கில் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. சிறப்பு சிறப்பு புலனாய்வுக் குழுவிற்கு அனைத்து உதவிகளும் கிடைக்கிறது" என்றார்  ஷகில் அக்தர்

ஏற்கெனவே நீதிமன்றத்தின் அனுமதி பெற்று  ராமஜெயத்தின் உதவியாளர்களாக வேலை பார்த்த மோகன், நந்தகுமார் ஆகியோருக்கு சிபிஐ உதவியுடன் சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முறை முக்கிய ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படுகிறது என்பதால்  சோதனைக்குப் பிறகு  இந்த வழக்கில் முக்கிய   திருப்பங்கள்  ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in