மேட்டூரில் இருந்து 1.25 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றம்; மூழ்கிய வீடுகள்: ஊரை காலி செய்த மக்கள்!

மேட்டூர் அணை
மேட்டூர் அணை
நாதல் படுகை கிராமத்தில் நீரில் முழ்கியுள்ள வீடு
நாதல் படுகை கிராமத்தில் நீரில் முழ்கியுள்ள வீடு

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று காவிரி கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் பெய்து வரும் தொடர் கனமழையின் விளைவாக கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு கடந்த 50 நாட்களாக அதிக அளவில் உள்ளது. இதனால் ஜூலை மாதம் 16-ம் தேதி மேட்டூர் அணையில் தனது முழு கொள்ளளவை எட்டியது. அதன் பின்னர் காவிரியில் மேட்டூருக்கு வரும் மொத்த நீரும் அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

ஜூலை 16-ம் தேதிக்கு பின்னர் அப்படி காவிரியில் வந்த நீர் முழுவதும் மேட்டூரில் இருந்து திறந்து விடப்பட்டு இதுவரை மூன்று முறை காவிரியில் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்தது. அவை அப்படியே காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் வழியாக கடலுக்கு அனுப்பப்பட்டது. தற்போது கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக நான்காவது முறையாகவும் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் 65 ஆயிரம் கனஅடியாக இருந்த மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்று 80,000 கன அடியாக இருந்தது. அது மேலும் அதிகரித்து இன்று காலை நிலவரப்படி ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் மொத்த நீரும் அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளதால் காவிரி கரையோர கிராமங்கள் வெள்ள அபாயத்தில் தொடர்ந்து நீடிக்கின்றன. பல கிராமங்கள் நீரில் தத்தளிக்கின்றன.

கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களில் வெள்ள நீர் வடிந்து இயல்பு வாழ்க்கை திரும்பிய நிலையில் திரும்பவும் கொள்ளிடத்தில் அதிக அளவு வெள்ள நீர் வரக்கூடும் என்பதால் அவர்கள் செய்வதறியாது திகைத்துப் போய் உள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஒன்றியத்தில் உள்ள முதலைமேடு திட்டு, நாதல்படுகை, வெள்ளைமணல், சந்தப்படுகை ஆகிய கிராமங்களில் நான்காவது முறையாக வெள்ளநீர் உட்புகுந்து அங்குள்ள மக்கள் கிராமங்களை காலி செய்யும் நிலை தொடர்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in