காவிரிக்கு நாளை செல்ல வேண்டாம்; புனித நீராடவும் வேண்டாம்: மக்களுக்கு ஆடிப்பெருக்கு அலர்ட்

மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீர்
மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீர்

மேட்டூருக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்துள்ளதால் மேட்டூரில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் தொடர்ந்து அதிகரிக்கப்படுகிறது. அதனால் நாளை ஆடிப்பெருக்கு தினத்தில் காவிரி ஆற்றில் யாரும் புனித நீராட வேண்டாம் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மீண்டும் அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவ மழை நல்ல முறையில் பெய்ததால் கர்நாடகத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் ஆகிய இரு அணைகளும் கடந்த மாத மத்தியிலேயே முழுவதுமாக நிரம்பியது. அதன் விளைவாக அந்த அணைகளுக்கு வரும் நீர் முழுவதும் அப்படியே காவிரியில் திறந்து விடப்பட்டது.

அதனால் கடந்த மாத இறுதியில் மேட்டூர் அணை மீண்டும் தனது முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து அணைக்கு வந்த ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடி நீரும் அப்படியே காவிரியில் திறந்து விடப்பட்டது. அதன் பின் நீர் வரத்து குறைந்ததால் பாசனத்திற்காக 20,000 கன அடி நீர் மட்டும் திறக்கப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் மேட்டூருக்கு வரும் நீரின் அளவு கடந்த ஐந்து தினங்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 60,000 கனஅடியாக இருந்த நீர் வரத்து இன்று 75,000 கன அடியாக உயர்ந்துள்ளது. இது மேலும் அதிகரிக்க கூடும் என்று தெரிகிறது. அதனால் அணைக்கு வரும் மொத்த நீரும் அப்படியே காவிரியில் திறந்து விடப்படும்.

தற்போது மேட்டூர் அணையிலிருந்து அனல் மின் நிலையங்கள் மற்றும் 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 60 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் அதிக நீர் வரத்து தொடருமானால் 75 ஆயிரம் முதல் ஒரு லட்சம் கன அடி வரை திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேட்டூர் அணையில் இருந்து அதிக அளவு நீர் வெளியேற்றப்படுவதால் காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாளை ஆடிப்பெருக்கு தினம் என்பதால் காவிரி கரையோரம் உள்ளவர்கள் காவிரி அன்னைக்கு சடங்குகளை செய்து வழிபடுவதும், புனித நீராடி வழிபடுவதும் வழக்கம். அவ்வாறு நாளை காவிரிக்கு செல்ல வேண்டாம், ஆற்றில் இறங்கவோ, புனித நீராடவோ வேண்டாம் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in