கள்ளச்சாராய காவுகள்; கண்டறியப்பட்ட காரணங்களும் காணவேண்டிய தீர்வுகளும்!

கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்வர் ஆறுதல்...
கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்வர் ஆறுதல்...

22 உயிர்களை கள்ளச்சாராயம் காவுகொண்டிருப்பது தமிழக மக்கள் மத்தியில் பெரும் பரிதவிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதேசமயம், மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்க வேண்டிய இந்த விவகாரம் தமிழக அரசின் செயல்களால் மக்கள் மத்தியில் பெரும் பகடிக்கும் உள்ளாகியிருக்கிறது.

பலியானோர் குடும்பங்களுக்கு அவசர அவசரமாக பத்து லட்சம் ரூபாயை நிவாரணமாக அறிவித்தது, பாதிக்கப்பட்டவர்கள் அருந்தியது தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால் என்ற விஷச்சாராயம் என்று அறிவித்தது, முதல்வர் ஸ்டாலின் விரைந்து சென்று ஆறுதல் கூறியது, சாராயம் விற்றவருக்கே நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டது... என அரசின் நடவடிக்கைகள் அனைத்துமே கடும்  விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. 

‘டாஸ்மாக்ல குடிச்சுட்டு டூவீலர்ல போனா, நாம அரசாங்கத்துக்கு 1000 ரூபாய் தண்டம் தரணும். ஆனா, கள்ளச்சாராயத்தை குடிச்சுட்டு பாடையில் போனால் அரசாங்கமே நமக்கு பத்து லட்சம் ரூபாய் தரும்’ என்று இணையவாசிகள் தெறிக்க விடுகிறார்கள். இதுபோல ஓராயிரம் பகடிகள் இணையத்தில் உலா வந்துகொண்டிருக்கின்றன.

“இந்தச் சாவுகளுக்கு திமுக அரசின் கையாலாகாத்தனம்தான் காரணம்” என்று அதிமுக அடித்துச் சொல்கிறது. “உங்கள் ஆட்சியில் கள்ளச்சாராயம் கரைபுரண்டு ஓடவில்லையா? 20 பேருக்கும் மேல் சாகவில்லையா?” என்று பதிலுக்கு புள்ளிவிவரம் கொடுக்கிறது திமுக. கள்ளச்சாராயம் விற்றவர்கள் யார் என்று பார்த்தாலும் பாரபட்சம் இல்லாமல் இந்த இரண்டு கட்சிகளையும் சேர்ந்தவர்கள்தான் இதைச் செய்திருக்கிறார்கள். எக்கியார்குப்பத்தில் விற்றவர் அதிமுக கிளைச்செயலாளர் ஆறுமுகம். செங்கல்பட்டில் விற்றவர் திமுக ஒன்றிய துணைச்செயலாளரின் சகோதரர் அமாவாசை. போதாக்குறைக்கு, அதற்கு உடந்தையாக இருந்தவர் பாஜககாரரான விஜயகுமார். 

இதுபோன்ற உயிரிழப்புகள் தமிழ்நாட்டில் நடப்பது புதிதல்ல, தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரமானது, தமிழ்நாட்டில் 2016- 19 ஆண்டுகளில் கள்ளச்சாராய சாவுகள் இல்லை.  2020-ல்,  20 இறப்புகள், 2021-ல்  6 இறப்புகள் நடந்துள்ளதாகத் தெரிவிக்கிறது. மேலும், 2002-க்குப் பின் தமிழகத்தில் நிகழ்ந்த அனைத்து கள்ளச்சாராய இறப்புகளுக்கும் மெத்தனால் தான் காரணம் என்ற செய்தியையும் அது அழுத்தமாக பதிவு செய்துள்ளது. 

அப்படி மெத்தனால்தான் காரணம் என்று தெரிந்தாலும் அதை கட்டுப்படுத்தவோ கண்காணிக்கவோ மாநில அரசு பெரிதாக எதையும் செய்யாததுதான் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு சாவுகளுக்கு காரணமாகியிருக்கிறது. மெத்தனாலைப் பொறுத்தமட்டில், அதன் விற்பனை, கட்டுப்பாடு ஆகியவை தமிழக மதுவிலக்கு சட்டம் 1937, மற்றும்  1959-ல்  இதற்கான சட்டத்திருத்தம் ஆகியவற்றின் மூலம் மாநில அரசின் கீழ்தான் உள்ளது. அரசின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ள மெத்தனால் விற்பனையை காவல்துறை கண்காணித்து வந்திருந்தால் இந்த உயிரிழப்புகளை நிச்சயம் தடுத்திருக்க முடியும். 

டாஸ்மாக் மூலம் ஆண்டுக்கு 44,000 கோடி அரசுக்கு வருமானம் கிடைப்பதால் அரசு கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகளை முறையாக எடுக்கவில்லை. காவல்துறை, கிராம நிர்வாக அலுவலர், அரசியல் கட்சியினருக்குத் தெரியாமல் இவை நடக்கமுடியாது. இவர்களுக்கெல்லாம் தெரிந்தே பல ஆண்டுகளாக கள்ளச்சாராய விற்பனை நடந்து கொண்டுதான் இருக்கிறது. காவல்துறை அதிகாரிகளை பணியிட நீக்கம் செய்வதாலோ, இறந்தபின் வழக்குகள் பதிந்து  நடவடிக்கைகள் எடுப்பதாலோ இந்தப் பிரச்சினை முழுமையாகத் தீர்ந்துவிடாது.

ஏனென்றால் காவல்துறை அதிகாரிகள் சிலரே இத்தகைய நடவடிக்கைகளுக்கு அரசியல் அழுத்தங்களுக்காக, வளைந்து கொடுப்பதும் நிகழத்தான் செய்கிறது.  இந்த விவகாரத்திலும்கூட பறிமுதல் செய்து வைத்திருந்த  காலாவதியான கள்ளச்சாராயத்தை காவல்துறையினரிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கி விற்றதாக குற்றச்சாட்டு எழுந்திருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. 

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவையும், போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவையும் இணைத்து கடந்த ஆண்டில் உருவாக்கப்பட்ட, அமலாக்கப் பணியகம் - குற்றப் புலனாய்வுத்துறை எனும் தனிப்பிரிவு என்னதான் செய்து கொண்டிருக்கிறது என்ற கேள்வியும் இந்தச் சாவுகளின் பின்னணியில் பலமாக எதிரொலிக்கின்றன? இன்னொருபக்கம், ஏன் கள்ளச்சாராயத்தின் பக்கம் மக்கள் செல்கிறார்கள் என்பதையும் ஆராய வேண்டியுள்ளது.

"வழக்கமாக 50 ரூபாய் விற்கும் பாக்கெட்டுகள், 25 ரூபாய்க்கு விற்றதால், குடும்பம் குடும்பமாய் சென்று வாங்கிக்குடித்தோம்" என்று கள்ளச்சாராய சாவுகள் விழுந்த பகுதியைச் சார்ந்த ஒருவர் சொல்வதின் பின்னணியில் சமூக வறுமை இருக்கிறது. டாஸ்மாக் மதுவைவிட குறைந்த விலையில்  கள்ளச்சாராயம் விற்கப்படுவதால் அதை உடல் உழைப்புத் தொழிலாளிகள் நாடுவது அதிகரித்துள்ளது. அண்மைக் காலமாக மூன்று முறை   டாஸ்மாக் மதுபாட்டில்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

மதுவை வாங்க போதிய பணமில்லாமல் 2 தொழிலாளர்கள் சேர்ந்து ஒரு குவாட்டரை வாங்குவது என்பது டாஸ்மாக் கடைகளில் காலங்காலமாக காணக்கிடைக்கும் காட்சி. அப்படி அங்கு விற்கும் மதுவை வாங்க அதிகப்பணம் தேவைப்படுவதால் குறைந்த விலைக்கு கிடைக்கும் கள்ள மதுவை நாடிச்செல்கிறார்கள். 

”மதுபானங்களில் விலையை அரசு உயர்த்திக்கொண்டே போவதால்தான்  சாதாரண மக்கள் மலிவு விலை மது பக்கம் சென்றுள்ளனர்” என்று சுட்டிக்காட்டும் பாஜகவின் வானதி சீனிவாசன்,  ”சில சுயநல சக்திகள், அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு, அதிகாரத்தில் இருப்பவர்களின் துணையுடன் கள்ளச்சாராயம் காய்ச்சுவது போன்ற சட்ட விரோத, சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுகின்றனர். கள்ளச்சாராயம் காய்ச்சும் சமூக விரோதிகளையும் அவர்களின் பின்னணியில் இருக்கும் அரசியல், அதிகார பலம் கொண்டவர்களையும் கண்டறிந்து இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். கள்ளச்சாராயம் தொடர்பான வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து, தமிழ்நாட்டில்  கள்ளச்சாராயம்  இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்” என்கிறார். 

எக்கியார் குப்பத்தில் இதற்கு சில தினங்கள் முன்னரே 70 வயது கே.சுப்பராயன் என்பவர் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்திருக்கிறார். அப்போதே  இதுகுறித்து அரசு உரிய விசாரணை நடத்தி,  காரணத்தை கண்டறிந்திருந்தால் தற்போது நடந்திருக்கும்  இறப்புகளை தடுத்திருக்க முடியும் என்கிறார்கள்.

எக்கியார் குப்பத்திற்கு அருகில் உள்ள பகுதிகளில் வசிக்கும் சிலரும் இந்த வியாபாரிகளிடமிருந்து அன்றையதினம் கள்ளச்சாராயம் வாங்கி குடித்துள்ள நிலையில் அங்கே ஒருவரும் இறக்கவில்லை என்ற செய்தி ஒருபக்கம் நிம்மதியைத் தந்தாலும் இன்னொருபக்கம், எக்கியார் குப்பத்து மக்களை குறிவைத்து ஏதாவது சதி நடந்துள்ளதா என்று எழும் கேள்வியையும் அலட்சியப் படுத்திவிடக்கூடாது.   

மக்கள் கள்ளச்சாராயத்தைத் தேடிப் போகாமல் இருக்க வேண்டுமானால் இதைச் செய்ய வேண்டும் என்று சிலவற்றை சுட்டிக்காட்டுகிறார் தமிழக மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தலைவர் செல்லபாண்டியன். 

”டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் மீது சில்லறை விற்பனையைக் காட்டிலும் கூடுதல் விலை வைத்து விற்பனை செய்கிறார்கள். அது மட்டுமின்றி, டாஸ்மாக் கடைகளிலேயே போலி மது விற்பனை செய்யப்படுகிறது. டாஸ்மாக் கடைக்கு வரும் மதுபாட்டில்களை ஊழியர்களே பிரித்து, இரண்டு பாட்டில்களில் ஊற்றி, தண்ணீரை கலந்து பாட்டிலை நிரப்பி விற்கிறார்கள். இதனால், போதை கிடைக்காமல் மேலும் ஒரு பாட்டிலை வாங்க வேண்டியிருக்கிறது. கூலித் தொழிலாளர்களுக்கு அது கட்டுபடியாகாமல் போவதால் போதைக்கு வேறு வழிகளைத் தேடுகிறார்கள். 

எனவே, டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களின் விலையை அரசு அதிரடியாக குறைக்க வேண்டும். அல்லது ஹார்லிக்ஸ், ஷாம்பு பாட்டில்கள்  போல மதுவையும் குறைந்த அளவில் சிறிய பாட்டில்கள், அல்லது பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து சில்லறை விலையில்  விற்கவேண்டும். அவ்வாறு செய்தால் கூலித் தொழிலாளர்கள் தங்களது சக்திக்கு ஏற்ப வாங்கிக் கொள்வார்கள். கள்ளச்சாராயத்தை நாடிச் செல்லவே மாட்டார்கள்.

செல்லபாண்டியன்
செல்லபாண்டியன்

கள்ளச்சாராய சாவுகளை அறவே தடுக்க வேண்டும் என்று அரசு நினைத்தால், கள் இறக்க அனுமதி வழங்கலாம். தென்னங் கள், பனங் கள் போன்றவை மலிவான விலையில் கிடைக்கும் என்பதால் ஏழை, எளிய தொழிலாளர்கள் கள்ளச்சாராயத்தை நாடுவதை இதன் மூலம் தடுக்கமுடியும்" என்கிறார் செல்லபாண்டியன். 

மதுப்பழக்கம், மதுவுக்கு அடிமையாதல், குடிநோய், கள்ளச் சாராய சாவுகள் என்பவை மிகவும் ஆழமான, சிக்கலான, சமூகப் பொருளாதார, பண்பாடு சார்ந்த  பிரச்சினையாகும். இதற்கு எளிய தீர்வு என எதுவும் இல்லை. பரந்துபட்ட ஒருங்கிணைந்த பல்துறை நடவடிக்கைகள் அவசியம். அவரவர்கள் தங்களுக்குத் தோன்றிய கருத்துகளையும், தீர்வுகளையும் முன் வைக்கின்றனர். அக்கருத்துகள் முக்கியமானவை என்றாலும் அவை மட்டுமே பிரச்சினைக்கு தீர்வாக அமையாது. 

ஆனால், சமூக சமுத்துவத்திற்கான மருத்துவர் சங்க பொதுச்செயலாளர் மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் இதுகுறித்து பகிர்ந்திருக்கும் கருத்துகள் தீர்வுகளை நோக்கி நம்மை நகர்த்துகிறது.

“ஏறத்தாழ எட்டாயிரம் ஆண்டுகளாக மனிதகுலம் சந்தித்துவரும் இப்பிரச்சினைக்கு, எந்த எளிய தீர்வும் இதுவரை பயனளித்துவிடவில்லை.  மது மக்களின் வாழ்க்கை முறைகளில் பெரும் தாக்கத்தை வரலாற்று நெடுகிலும் உருவாக்கியுள்ளது.  சமூகப் பொருளாதார நெருக்கடிகள் உருவாக்கும் வாழ்க்கை முறைகளும் மதுப் பழக்கம் கூடுதல்,  குறைதல் போன்றவற்றை உருவாக்கியுள்ளது. 

டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்
டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்

இந்த மரண நிகழ்வுகள், இன்றைய வாழ்வியல் நெருக்கடி, அடித்தட்டு மக்களை ஆண் பெண் பாகுபாடின்றி குடும்பமாக மது அருந்தும், மோசமான பண்பாட்டு நிலைக்கு ஆளாக்கியுள்ளது என்ற உண்மையைக் காட்டுகிறது. பொருளாதாரக் காரணிகளும், வாங்கும் சக்தியும், மதுவின் விலையும் இவற்றிற்கு முக்கியக் காரணங்கள்.   

மதுப்பழக்கத்திற்கான சமூகப் பொருளாதார காரணங்களை களைதல், குடிநோயருக்கு இலவச மறுவாழ்வு சிகிச்சைகளை வழங்குதல், மனநல ஆலோசனைகளை, சிகிச்சைகளை வழங்குதல், மது விற்பனையை மேலும் முறைப்படுத்துதல், லைசென்ஸ் முறையை கொண்டுவருதல், மதுவிற்பனையை வருவாய் ஈட்டும் முறையாக கருதி செயல்படும் போக்கை அரசு கைவிடுதல், மதுப்பழக்கம் உள்ள ஏழைகளுக்கு எம்ஜிஆர் வழங்கியது போல் மலிவுவிலை மது வழங்குதல் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். 

அதே சமயம், மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும்.  மது அருந்தக்கூடாது என்ற மனநிலையை ஒவ்வொருவருக்கும் உருவாக்க, பண்பாட்டு முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். மது அருந்தலாமா, கூடாதா என்பது தனிநபர் விருப்பம் சார்ந்தது. அதே சமயம், மது அருந்தக்கூடாது என்ற மனநிலையை ஒவ்வொருவருக்கும் உருவாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் அரசுக்கும், சமூகத்திற்கும் உள்ளது. அதை முனைப்போடு, உறுதியாக அரசும், சமூகமும், நிறைவேற்றிட வேண்டும். 

மதுவுக்கும், மக்களுக்குமான உறவை உடைப்பது என்பது, கடினமான, பல்முனை பணி. அதை கடினமான,  அறிவியல் ரீதியான, தொடர் முயற்சிகளின்  மூலம்தான் சாதிக்க வேண்டும்’ என்பது ஜி.ஆர்.ரவீந்திரநாத்தின் பார்வையாக இருக்கிறது. 

மக்களைப் பாதுகாக்க தொலைநோக்கு திட்டங்களை தீட்டி செயல்படுத்துவதே அரசாங்கத்தின் தலையாய பணி. அதற்காக மது விற்பனையில் இலக்குவைத்து திட்டங்களை தீட்டாமல், மதுவிலக்கை நோக்கிய திட்டங்களோடு மாநில அரசு பயணிக்க வேண்டும் என்பதே சமூகத்தின் தற்போதைய பெருங் கவலையாக இருக்கிறது.   

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in