சிக்க வைத்தது ஆடியோ: பச்சையப்பன் கல்லூரி பேராசிரியை மீது அதிரடி நடவடிக்கை

சிக்க வைத்தது ஆடியோ: பச்சையப்பன் கல்லூரி பேராசிரியை மீது அதிரடி நடவடிக்கை

மாணவர்களிடம் சாதிய பாகுபாடு பற்றி பேசியது சர்ச்சையான நிலையில், பச்சையப்பன் கல்லூரி பேராசிரியை அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றி வருபவர் அனுராதா. இவர், கடந்த 18-ம் தேதி தனது துறையின் கீழ் தமிழ் படித்து வரும் மாணவர்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு சாதிய பாகுபாடுகளை ஏற்படுத்தும் வகையில் பேசினார். அந்த ஆடியோ பதிவில், மாணவர்களின் முகத்தைப் பார்த்தாலே அவர் பி.சியா, எம்பிசியா அல்லது எஸ்சியா என்று தெரிந்துவிடும். நீ என்ன சாதி என்பதுகூட தெரியாது. அதனால் நீ என்ன சாதி என்று கேட்டுள்ளார். மேலும் தமிழ்த்துறையில் படித்து வரும் சில மாணவர்களின் பெயர்களை குறிப்பிட்டு அவர்கள் சாதியை குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், பச்சையப்பன் கல்லூரி முதல்வர் கஸ்தூரியிடம் விளக்கம் கேட்கப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தியது. அதற்கு பிறகு அவர் மீது எடுக்கப்பட உள்ள நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழ்த்துறை தலைவர் அனுராதா 2 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக பச்சையப்பன் கல்லூரி அறக்கட்டளையின் செயலாளர் துரைசாமி தெரிவித்துள்ளார். மேலும், "உதவிப் பேராசிரியர் முத்துசாமி, சென்னை உயர் நீதி மன்றத்தின் வழக்கறிஞர் செல்வம், பச்சையப்பன் கல்லூரியில் செயல்பட்டு வரும் எஸ்சி, எஸ்டி குழுவினர் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் தமிழ்நாடு தனியார் கல்லூரி ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் பச்சையப்பன் கல்லூரியில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் விசாரணையில் எந்த வித குறுக்கீடுகளும் இல்லாமல் இருக்க பேராசிரியர் அனுராதாவை 2 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்’’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in