ஜெகன்மோகன் ரெட்டியின் செம மூவ்... ஆந்திராவில் இன்று தொடங்குகிறது சாதிவாரி கணக்கெடுப்பு!

ஜெகன்மோகன் ரெட்டியின் செம மூவ்... ஆந்திராவில் இன்று தொடங்குகிறது சாதிவாரி கணக்கெடுப்பு!

ஆந்திராவில் இன்று முதல் மாநிலம் முழுவதும் விரிவான சாதிவாரி கணக்கெடுப்பு பணிகள் தொடங்கி நடைபெற உள்ளது. ஏற்கனவே 2 நாட்கள் சோதனை அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் இன்று விரிவாக கணக்கெடுக்கும் பணி தொடங்குகிறது.

இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு பணியை பீகார் மாநிலம் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. இதையடுத்து அனைத்து மாநில முதல்வர்களும், மத்திய அரசும் சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு அமைப்பினர் கூறி வருகின்றனர்.

அதோடு காங்கிரஸ் உள்பட பல மாநில கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக காங்கிரஸ் தனது தேர்தல் வாக்குறுதியில் கூட சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதாக அறிவித்துள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பு
சாதிவாரி கணக்கெடுப்பு

இந்நிலையில் தான் பீகார் மாநிலத்தை தொடர்ந்து ஆந்திராவில் சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என அந்த அரசு அறிவித்தது. ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கும் நிலையில் முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி உள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்கள் உள்பட அனைத்து சாதியை சேர்ந்தவர்களுக்கும் அதிகாரம் கிடைக்கும் வகையில் இந்த சாதிவாரி கணக்கெடுப்பு பணி தொடங்க உள்ளதாக அம்மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சீனிவாசன வேணுகோபால கிருஷ்ணா தெரிவித்து இருந்தார். மேலும் அவர் கூறுகையில், ‛‛மாநிலத்தில் 139 பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்த மக்கள் உள்ளனர். இவர்களின் விருப்பங்களை நிறைவேற்ற இந்த சாதிவாரி கணக்கெடுப்பு என்பது உதவியாக இருக்கும்'' என்றார்.

ஜெகன்மோகன் ரெட்டி
ஜெகன்மோகன் ரெட்டி

அதன்படி கடந்த 15ம் தேதி சோதனை முயற்சியாக மாநிலத்தில் 2 நாட்கள் சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கியது. இதையடுத்து இன்று முதல் மாநிலம் முழுவதும் விரிவான சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கப்பட உள்ளது. இந்த பணியை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு சாதி சங்கங்களின் தலைவர்களுடன் அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டம் மாநிலம் அளவிலும், மாவட்ட அளவிலும் தனித்தனியாக நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே தான் பீகாரை பின்பற்றி ஆந்திராவில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டிலும் தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தார். தற்போது ஆந்திராவில் சாதிவாரி கணக்கெடுப்பு பணிகள் இன்று முதல் தொடங்க உள்ளதால் தமிழகத்திலும் இந்த கோரிக்கை வலுக்க வாய்ப்புள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in