
கேரளத்தில் விஷ்வல் கம்யூனிகேசன் கல்லூரியில் சாதிப் பாகுபாடு தலைவிரித்து ஆடுவதாக கல்லூரியின் மாணவர் பேரவை சார்பில், கல்லூரியின் கெளரவத் தலைவரும், இருமுறை தேசிய விருதுபெற்ற இயக்குநருமான அடூர் கோபாலகிருஷ்ணனுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அதை அவர் நிராகரித்திருப்பது மாணவர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் கோட்டயத்தில் கே.ஆர்.நாராயணன் நேஷ்னல் இன்ஸ்டியூட் ஆப் விஸ்வல் சயின்ஸ் அண்ட் ஆர்ட்ஸ் இயங்கிவருகிறது. இந்நிறுவனம் தன்னாட்சி அமைப்பாகும். கேரள அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இதன் தலைவராக பிரபல திரைப்பட இயக்குநரும், இருமுறை தேசிய விருது பெற்றவருமான அடூர் கோபாலகிருஷ்ணன் உள்ளார். இந்நிறுவனத்தின் இயக்குநராக ஷங்கர் மோகன் என்பவர் உள்ளார். இவர் கல்லூரி மாணவர்களிடமும், பணி செய்யும் பணியாளர்களிடமும் சாதிய பாகுபாடு காட்டுவதாக சர்ச்சை எழுந்தது.
கல்லூரியின் இயக்குநர் ஷங்கர் மோனனை பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி கடந்த 5-ம் தேதி முதல் மாணவர்கள் சார்பில் போராட்டமும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கல்லூரியின் மாணவர் பேரவை சார்பில் அதன் தலைவராக இருக்கும் அடூர் கோபாலகிருஷ்ணனுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டு உள்ளது. அதில், “இந்தியாவில் முதல் பட்டியல் இனக் குடியரசுத்தலைவர் கே.ஆர்.நாராயணன் பெயரில் இருக்கும் இந்தக் கல்வி நிறுவனத்தில் பட்டியல் இன மக்கள் சாதியால் பாகுபாடு காட்டப்படுகிறது. கல்லூரி நடத்தும் திசை என்னும் நிகழ்வில் பட்டியல் இன மாணவர்கள் வேண்டுமென்றே நிராகரிக்கப்படுவதாகவும், ஷங்கர் மோகன் பணிநேரம் முடிந்தும் தன் வீட்டு வேலைகளுக்கு சாதிய அடக்குமுறையோடு ஈடுபடுத்துவதாகவும் குற்றம் சாட்டியும் கடிதத்தில் மாணவர்கள் எழுதியிருந்தனர்.
ஆனால் இந்த கடிதத்தை ஆதாரமில்லாத குற்றச்சாட்டு என இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் நிராகரித்தார். மேலும், அவர் கல்லூரி இயக்குநர் ஷங்கர் மோகன் நல்ல குடும்பப் பின்னணி கொண்டவர் என்றும் பதில் அளித்துள்ளார். இது மாணவர்களை மேலும் கோபமூட்டியுள்ளது. இதன் மூலம் தேசிய விருதுபெற்ற இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணனும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.