பாஞ்சாங்குளம் அரசு பள்ளியிலும் சாதி பாகுபாடா?- மாவட்ட கல்வி அலுவலர் நேரில் ஆய்வு

கடையில் பொருள் வாங்க வந்த குழந்தைகள்
கடையில் பொருள் வாங்க வந்த குழந்தைகள்

தென்காசி மாவட்டம், பாஞ்சாங்குளம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சாதி பாகுபாடு இருப்பதாகத் தகவல் பரவியது. இதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ளது பாஞ்சாங்குளம் கிராமம். பெரும்புத்தூர் ஊராட்சிக்கு உள்பட்ட இங்கு அரசு பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளிக்கூடத்திற்கு வரும் வழியில் மிட்டாய் கடை ஒன்று உள்ளது. அங்கு குழந்தைகள் மிட்டாய் வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டே பள்ளிக்குச் செல்வது வழக்கம்.

அந்தக் கடைக்காரர் குழந்தைகளிடம், “இனிமேல் நீங்கள் யாரும் இங்குவந்து தின்பண்டம் எதுவும் வாங்க வேண்டாம். ஸ்கூலுக்குப் போங்க. தின்பண்டம் உள்ளூர் கடையில் வாங்கக்கூடாது. நீங்கள் போங்க ”எனக் குழந்தைகளிடம் சொல்கிறார். கூடவே, “ இதை உங்கள் வீட்டிலும் போய் சொல்லுங்கள். இனி உங்களுக்கு பொருள்கள் கொடுக்க மாட்டாங்கடா. ஊரில் கட்டுப்பாடு வந்திருக்கு” எனச் சொல்கிறார் கடைக்காரர்.

உடனே, கட்டுப்பாடா? என அந்தக் குழந்தைகள் ஆச்சரியத்தோடு, என்னக் கட்டுப்பாடு என்கிறார்கள். உடனே, ‘கட்டுப்பாடுன்னா.. ஊர்ல ஒரு கூட்டம் போட்டு பேசிருக்கு. உங்கத் தெருவுல உள்ளவங்களுக்கு பொருள்கள் கொடுக்கக் கூடாதுன்னு” எனக் கூலாகச் சொல்லி குழந்தைகளைத் திருப்பி அனுப்புகிறார். இதை அந்தக் கடைக்காரரே வீடியோவும் எடுத்துள்ளார். பட்டியல் இனத்தைச் சேர்ந்த அந்த குழந்தைகள் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியாமல் ஏக்கத்துடன் செல்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதனைத் தொடர்ந்து தீண்டாமையை அந்த கிராமத்தில் அமல்படுத்திய பாப்பாங்குளம் நாட்டாமை மகேஷ்குமார் கைது செய்யப்பட்டார். அவருக்கு சொந்தமான கடைக்கும் கோட்டாட்சியர் சுப்புலெட்சுமி சீல் வைத்தார். இதேபோல் பாஞ்சாங்குளத்தை சேர்ந்த ராமச்சந்திரன்(20) என்னும் வாலிபரும் கைது செய்யப்பட்டார். இருவரும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் சிறையில் உள்ளனர். மேலும் முருகன், குமார், சுதா ஆகிய மூவர் மீதும் இவ்விவகாரத்தில் கிரிவலம்வந்தநல்லூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே பாஞ்சான் குளம் கிராம நிர்வாக அலுவலரும் மாற்றப்பட்டார்.

இந்நிலையில் பாஞ்சான் குளம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும் சாதிய பாகுபாடு நிலவுவதாக தகவல் பரவியது. இதன்பேரில் தென்காசி மாவட்டக் கல்வி அலுவலர் கபீர் இன்று காலை நேரடியாக பள்ளிக்குச் சென்று ஆய்வுசெய்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கபீர் கூறுகையில், “ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சாதிய பாகுபாடு காட்டப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் ஆய்வு செய்தோம். அதில் அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை எனத் தெரியவந்துள்ளது. அரசுப்பள்ளியில் அனைத்து மாணவர்களும் ஒரேமாதிரியே நடத்தப்படுகிறார்கள். இந்த அறிக்கையை ஆட்சியரிடம் சமர்பிக்க உள்ளேன்” என்றார். இதேபோல் தென்காசி மாவட்ட ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல அலுவலர் கந்தசாமியும் தனியே ஆய்வு செய்து, பள்ளியில் தீண்டாமை இல்லை என அறிக்கைக் கொடுத்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in