
பாகிஸ்தானில் ஏற்பட்ட உணவு பஞ்சத்தால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கைக்கு உதவியது போல பிரதமர் மோடி, பாகிஸ்தானுக்கும் உதவிட வேண்டும் என்று தமிழ்நாடு விவசாய சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக உணவு தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் தற்போது கடுமையான உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் பாகிஸ்தானில் வரலாறு காணாத மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்த நிலையில் அந்நாட்டின் பயிர் சாகுபடி சுமார் 80 சதவீதம் வரை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த அக்டோபரில் கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களுக்கு மிகப்பெரிய அளவில் பற்றாக்குறை ஏற்பட்டது.
இதனைச் சாமளிக்க கடும் நிதி நெருக்கடியிலும் கூட வெளிநாடுகளில் இருந்து பாகிஸ்தான் உணவு தானியங்களை இறக்குமதி செய்தது. இதன் காரணமாக அந்நிய செலாவணி கையிருப்பு குறையத் துவங்கியது. பாகிஸ்தானின் தற்போதைய அந்நிய செலாவணி கையிருப்பின் மூலம் இன்னும் ஒரு சில வாரங்கள் மட்டுமே சமாளிக்க முடியும் என்ற நிலை உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து உணவு தானியங்கள், கச்சா எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் முழுவதும் உணவுக்கு கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. கோதுமை மாவுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. பாகிஸ்தானில் கோதுமை வாங்க ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மக்கள் சிலர் உயிரிழந்துள்ளனர். அனைத்து உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் இந்தியாவில் இருந்து அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதை பாகிஸ்தான் அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதன் காரணமாகவே பாகிஸ்தானின் இறக்குமதி செலவு அதிகரித்துள்ளது. இலங்கை நாடு திவாலானது போல் பாகிஸ்தானும் திவால் நிலையை நோக்கிச் செல்கிறது. இதனிடையே பாகிஸ்தானுக்கு இந்தியா உதவ விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்க கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறுகையில், " உலகில் ஒருவர் கூட பசியால் வாடக்கூடாது. மழையால் விவசாயம் பாதிக்கப்பட்டு அங்கு உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில் விவசாயியாக பாகிஸ்தான் விவசாயிகளின் கஷ்டங்களை உணர்ந்து கொள்ள முடிகிறது. பிரதமர் மோடி உதவி உள்ளம் கொண்டவர். கண்டிப்பாக பாகிஸ்தான் எதிரி நாடாக இருந்தாலும் அந்த நாட்டிற்கு உதவ வேண்டும். உலகில் எந்த நாட்டிலும் உணவு பஞ்சம் வரக்கூடாது. இலங்கைக்கு உதவினோம். உணவு பொருட்களை அனுப்பினோம். அதே போல் பாகிஸ்தானுக்கும் அனுப்ப பிரதமர் மோடியை வலியுறுத்தி விவசாயிகள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். சாதி, மதம், பேதம் எல்லாம் பசிக்கு தெரியாது. விவசாயி இருக்கும் நாட்டில் பசி இருக்கக்கூடாது" என்றார்.