பெரம்பலூர் கனரா வங்கியின் முன்பாக நிறுத்தப்படும் வாகனங்களில் வைக்கப்பட்டிருக்கும் பணம் திருடு போவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் கனரா வங்கியின் கிளை ஒன்று இயங்கி வருகிறது. இந்த வங்கியில் நேற்று எறையசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த வரதராஜ் என்ற விவசாயி ஆவணங்களை அடமானம் வைத்து ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றார். அந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்டு வங்கியின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த தனது இருசக்கர வாகனத்தில் வைத்துவிட்டு தனக்கு வந்த அலைபேசி அழைப்பு எடுத்து பேசிக் கொண்டிருந்தார். பேசி முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தை பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த பணம் திருடு போயிருந்தது.
அதேபோல எளம்பலூர் இந்திரா நகரைச் சேர்ந்த எலக்ட்ரிசியன் பாலமுருகன் என்பவர் நேற்று அந்த வங்கிக்கு வந்து வீட்டு கடன் ரூபாய் 2 லட்சம் பெற்றார். அந்த பணத்தை எடுத்துக்கொண்டு வந்து தனது இருசக்கர வாகனத்தில் உள்ள பெட்டியில் வைத்துவிட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது பெட்டியில் வைக்கப்பட்டிருந்த இரண்டு லட்சம் பணமும் திருடு போயிருந்ததது.
அதிர்ச்சியடைந்த இவர்கள் இருவரும் இது குறித்து உடனடியாக பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்போதுதான் நேற்று முன்தினமும் இப்படி இதே வங்கியில் இன்னொரு சம்பவமும் நடந்திருப்பது தெரியவந்தது. வாடிக்கையாளர் ஒருவர் வங்கியில் இருந்து 40 ஆயிரம் பணம் எடுத்துக் கொண்டு வந்து இரு சக்கர வாகனத்தில் வைத்துவிட்டு பக்கத்தில் சென்றிருந்தபோது அந்த பணமும் திருடு போயிருப்பதும் அது குறித்த புகார் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்திருக்கிறது.
கண்காணிப்பு கேமராக்கள் உள்ள, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இந்த பகுதியில் இப்படி தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வைக்கப்படும் பணம் திருடு போகும் நிலையில் வங்கி நிர்வாகமும் இது குறித்து அக்கறை கொள்ளவில்லை என்று வருத்தப்படும் பொதுமக்கள், காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்தால் உடனடியாக இந்த திருடர்களை பிடித்து விடலாம் என வேண்டுகோள் விடுகின்றனர்.