50 லட்சம் கேட்டு பெண் செய்தி வாசிப்பாளர் மிரட்டல் வழக்கு: நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்!

50 லட்சம் கேட்டு பெண் செய்தி வாசிப்பாளர் மிரட்டல் வழக்கு: நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்!

தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரை செல்போனில் மிரட்டி 50 லட்சம் ரூபாய் பணம் கேட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் சிபிஐ வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சவுக்கு சங்கர் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், வழக்கு விசாரணைக்காக அவர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

சென்னை நீலாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் மகாலட்சுமி. இவர் தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 2016-ம் ஆண்டு மகாலட்சுமி தன்னைப் பற்றி சவுக்கு சங்கர் அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக புகார் ஒன்றை அளித்தார். புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், அதே ஆண்டு மீண்டும் தன்னை யாரோ செல்போனில் தொடர்கொண்டு தன்னைப் பற்றிய தவறான பதிவுகளை அகற்ற வேண்டுமென்றால் 50 லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் எனக்கேட்டு மிரட்டுவதாக ஒரு புகாரையும் அளித்தார். அப்புகார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், மகாலட்சுமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

குறிப்பாக தான் அளித்த இரு புகார் மீதும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், தனக்கு காவல்துறை மீது நம்பிக்கை இல்லாத காரணத்தால் தனது புகார் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். மகாலட்சுமி தொடர்ந்த வழக்கில் விசாரணை நடத்திய நீதிமன்றம் இவ்வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது.

அதன் தொடர்ச்சியாக சி.பி.ஐ அதிகாரிகளால் இவ்வழக்கில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மகாலட்சுமியின் செல்போனுக்கு அவரது சகோதரர் சதீஷ் என்பவர் தான் தொடர்புகொண்டு பணம் கேட்டு மிரட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சதீஷை பிடித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் மகாலட்சுமிக்கும் இதில் தொடர்பிருப்பது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் மகாலட்சுமி மற்றும் அவரது சகோதரர் சதீஷ் ஆகிய இருவரையும் இவ்வழக்கில் குற்றவாளிகளாக சேர்த்ததுடன் குற்றம்சாட்டப்பட்ட சவுக்கு சங்கரை முக்கிய சாட்சியாக சேர்த்து வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இவ்வழக்கு தொடர்பான விசாரணை இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், சாட்சி விசாரணைக்காக சவுக்கு சங்கர் ஆஜரானார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in