
ராமநாதபுரம் அருகே அஞ்சலக வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்குத்தொகையில் கைவைத்த பெண் ஊழியர் உள்பட 2 பேர் மீது தபால் ஆய்வாளர் போலீஸில் புகார் அளித்தார்.
ராமநாதபுரம் அருகே துரத்தியேந்தல் அருண்குமார் (27). சித்தார்கோட்டை அருகே ஜமீன்தார்வலசையைச் சேர்ந்த ஜெயந்தி (32). இவர்கள் இருவரும் சம்பை கிளை அஞ்சலத்தில் பணியாற்றினர்.
இக்கிளையில் கடந்த 2015 முதல் 2018-ம் ஆண்டு வரையிலான கணக்கு தணிக்கை நடந்தது. இதில் 2017 ஏப்.25-ம் தேதி முதல் 2018 ஏப்.13-ம் தேதி வரை அஞ்சலக சிறுசேமிப்பு, நிரந்தர சேமிப்பு கணக்குகளில் வாடிக்கையாளர்கள் செலுத்திய பணத்தை வரவு வைக்காமல் இருந்தது தெரிந்தது. இத்தொகையில் ஜெயந்தி ரூ.24 ஆயிரத்து 700 , அருண் குமார் ரூ.49 ஆயிரத்து 500 என ரூ.74 ஆயிரத்து 200 கையாடல் செய்துள்ளதாக திருவாடானை அஞ்சல் கோட்ட ஆய்வாளர் சுதன் போலீசில் புகாரளித்தார். இதன்படி, தேவிபட்டினம் போலீஸார் இருவர் மீதும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.