வேலி தாண்டிய 20 எருமை மாடுகள் மீது ஆசிட் வீச்சு: தோட்டத்து உரிமையாளர் மீது பாய்ந்தது வழக்கு

வேலி தாண்டிய 20 எருமை மாடுகள் மீது ஆசிட் வீச்சு: தோட்டத்து உரிமையாளர் மீது பாய்ந்தது வழக்கு

கோவையில் நர்சரி தோட்டத்தைச் சேதப்படுத்திய 4 பசு மற்றும் 20 எருமை மாடுகள் மீது ஆசிட் வீசிய இருவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் உதகை சாலை ரயில்வே கேட் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார்(39). விவசாயியான இவர் 10 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்துள்ளார். அதில் 2 ஏக்கர் விளைநிலத்தில் பாக்கு, வாழை பயிரிட்டுள்ளார். மேலும் ஆடு, பசு மற்றும் எருமை உள்ளிட்ட கால்நடைகளையும் வளர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் ராஜ்குமார் வளர்க்கும் 4 பசு, 20 எருமை மாடுகளின் முகம் மற்றும் உடலின் மீது மர்மநபர்கள் ஆசிட்டை ஊற்றியுள்ளனர். இதனால் மாடுகளின் முகம் மற்றும் உடலின் இரண்டுபுறமும், மேல்பகுதியில் தோல் வெந்து போனது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ராஜ்குமார், மேட்டுப்பாளையம் காவல்துறை, வனத்துறை மற்றும் கால்நடைத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

இதன்பேரில் அங்கு வந்த கால்நடை மருத்துவக்குழுவினர், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக் சிகிச்சை அளித்தனர். இது தொடர்பாக மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் ராஜ்குமார் புகார் அளித்தார். இதன் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் (51) என்பவருக்கு சொந்தமான இடத்திற்கு மேய்ச்சலுக்கு சென்ற எருமை மாடுகள், அங்கிருந்த நர்சரி தோட்டத்தைச் சேதப்படுத்தியதும், இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதும் தெரியவந்தது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ரவிச்சந்திரன் கூலித் தொழிலாளியான மணிகண்டன் (29) என்பவருடன் இணைந்து மாடுகள் மீது ஆசிட் ஊற்றியதும் தெரியவந்தது. இதையடுத்து ரவிச்சந்திரன் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவர் மீதும் இன்று வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் மேட்டுப்பாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in