கூகுள் பே மூலம் லஞ்சம்: சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் உள்பட 3 பேர் மீது வழக்கு

கூகுள் பே மூலம் லஞ்சம்
கூகுள் பே மூலம் லஞ்சம்கூகுள் பே மூலம் லஞ்சம்: சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் உள்பட 3 பேர் மீது வழக்கு

சுகாதாரத்துறை மூலம் நடைபெற்ற கலந்தாய்வில் இடமாறுதல் பெற்ற செவிலியர்களை  விடுவிக்க கூகுள் பே மூலம் லஞ்சம் வாங்கியதாக நாமக்கல் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் உள்ளிட்ட 3 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். 

நாமக்கல் மாவட்ட சுகாதாரப் பணிகள்  துணை இயக்குநராக பிரபாகரன் பணியாற்றி வருகிறார். இந்த துணை இயக்குநர் அலுவலகத்தில் முத்துமணி என்பவர் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். மாணிக்கம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல்நோக்கு பணியாளராக பணியாற்றி, தற்போது பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள சக்திமுருகன் என்பவரும் அடிக்கடி இந்த அலுவலகத்திற்கு வந்து செல்வார். 

இந்த நிலையில் சென்னை மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் இயக்குநர்,  மாநில அளவிலான கலந்தாய்வு அடிப்படையில் கடந்த 26.7.2021 முதல் 30.7.2021 வரை அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் புணிபுரியும் ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர்களை  அவர்களின் விருப்பத்தின் பேரில் இடமாற்றம் செய்ய உத்தரவிட்டார்.

இந்த கலந்தாய்வு அடிப்படையில், நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரிந்த 76 ஒப்பந்த செவிலியர்கள் பல்வேறு இடங்களுக்கு இடமாறுதல் உத்தரவு பெற்றனர். 

இடமாறுதலுக்கு உத்தரவு பெற்றவர்களைச்  சம்பந்தப்பட்ட மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர்கள், தாமதம் செய்யாமல் விடுவிக்க வேண்டும் என்று சென்னை ஊரக சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் நாமக்கல் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் பிரபாகரன், சுகாதார ஆய்வாளர் முத்துமணி மற்றும் சக்திமுருகன் ஆகியோர், கலந்தாய்வு மூலம் இடமாறுதல் பெற்ற ஒப்பந்த செவிலியர்களைத்  தற்போது பணிபுரியும் இடங்களில் இருந்து விடுவிக்க லஞ்ச பணம் பெற முடிவுசெய்து,  இடமாறுதல் பெற்றவர்களிடம்  அவர்களை விடுவிக்க ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை லஞ்சம் கேட்டுள்ளனர்.

பணம் கொடுத்தவர்களை உடனடியாக பணியில் இருந்து விடுவித்தும், பணம் கொடுக்காதவர்களைப்  பணியில் இருந்து விடுவிக்காமல் இழுத்தடித்தும் வந்தனர். லஞ்ச பணம் கொடுக்காமல் மாறுதல் உத்தரவு பெற முடியாது என்று நினைத்து மேலும்  சிலர்  பணம் கொடுத்து மாறுதல் உத்தரவு பெற்று சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் சுபாஷினி, ஆய்வாளர் நல்லம்மாள் ஆகியோர் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் நடத்திய சோதனையில்,  கூகுள் பே மூலம் சில ஒப்பந்த செவிலியர்களிடம் இருந்து பணம் பெற்றுள்ளது  கண்டறியப்பட்டுள்ளது. அதையடுத்து துணை இயக்குநர் பிரபாகரன்,  சுகாதார ஆய்வாளர் முத்துமணி மற்றும் சக்திமுருகன்  ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in