
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பீர்பாட்டிலை வீசி பயணிகளை அச்சுறுத்தும் செயலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 100 பேர் மீது ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை ஆவடி பகுதியை சேர்ந்த புதுக்கல்லூரி மாணவர் ஒருவர் நேற்று மதியம் கல்லூரியை முடித்துவிட்டு பேருந்தில் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து இறங்கிய போது அங்கு கூடியிருந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கையில் பீர் பாட்டிலுடன் பச்சையப்பன் கல்லூரிக்கு ஜே என்று கூச்சலிட்டவாறு வந்தனர். அப்போது திடீரென புதுக்கல்லூரி மாணவரை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சரமாரி தாக்கியதை பார்த்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் விரைந்து சென்று காயமடைந்த மாணவரை மீட்டு சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அந்த மாணவனை விடாமல் துரத்தி சென்ற கும்பல் சென்ட்ரல் ரயில் நிலையத்தினுள் நுழைந்து கையில் வைத்திருந்த பீர் பாட்டில் உள்ளிட்ட சில ஆயுதங்களை தூக்கி வீசி ரகளையில் ஈடுபட்டதால் ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்த பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இது குறித்து தகவலறிந்த சென்ட்ரல் ரயில்வே போலீஸார் ரகளையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை பிடிக்க சென்ற போது மாணவர்கள் நாலாபுறமும் சிதறி ஓட, அதில் 15 மாணவர்களை மட்டும் மடக்கி பிடித்து சென்ட்ரல் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தியதில் புதுக்கல்லூரி மாணவரிடம் கெத்துக்காட்ட துரத்தி சென்று தாக்கியது தெரியவந்தது. இதனையடுத்து ரயில்வே போலீஸார் ரயில் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 100 பேர் மீது பொது சொத்துகளை சேதப்படுத்துதல், சட்டவிரோதமாக கூடி கலகத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவின் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சம்பவயிடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து தப்பி ஓடிய மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.