
நொய்டா மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஹிண்டன் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக ஷோரூமில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான கார்கள் வெள்ளத்தில் மிதக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டா மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக காஜியாபாத்தில் உள்ள ஹிண்டன் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.
ஆற்றில் நீர் வெளியேற்றத்தைத் தொடர்ந்து வெள்ளத்தில் மூழ்கிய கர்ஹோ கிராமத்தைச் சேர்ந்த ஆதர்ஷ்(18), கிரிஸ் மிஸ்ரா(16) ஆகிய சிறுவர்களின் உடல்களை தேசிய பேரிடர் மீட்புப்படையினர் இன்று மீட்டனர். கன்ஹா உப்வான் மற்றும் மோர்டி ஆகிய இடங்களில் உள்ள இரண்டு மின் துணை மின் நிலையங்கள் எட்டு அடி நீரில் மூழ்கியதால், ராஜ்நகர் பகுதியில் மின்சாரம் தடைபட்டுள்ளது.
இந்த நிலையில், நொய்டா எக்கோடெக் என்ற புறநகர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள கார் ஷோரூம் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான புத்தம் புதிய கார்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதன் வீடியோ மற்றும் புகைப்படங்ஙகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன. கார்கள் வெள்ளத்தில் மூழ்கியால் கார் ஷோரூம் நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.