`3 ஆண்டு சிறைத் தண்டனை; 5 ஆயிரம் அபராதம்'- ரயில்வே பாதுகாப்புப் படையினர் பயணிகளுக்கு திடீர் எச்சரிக்கை

`3 ஆண்டு சிறைத் தண்டனை; 5 ஆயிரம் அபராதம்'- ரயில்வே பாதுகாப்புப் படையினர் பயணிகளுக்கு திடீர் எச்சரிக்கை

`ரயில்களில் பட்டாசு எடுத்து சென்றால், மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்' என ரயில்வே பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

ரயில்களில்  பட்டாசு, டீசல், பெட்ரோல் போன்ற எளிதில் தீப்பற்றும் பொருட்கள் எடுத்துச் செல்ல தடை உள்ளது. இருப்பினும், தீபாவளி நெருங்கும்போது வியாபாரிகள் மற்றும்  பயணிகள்,  அதன் அபாயத்தை உணராமல் பட்டாசுகளை சாதாரணமாக  எடுத்துச் செல்கிறார்கள்.  இதை தடுக்கும் வகையில், ரயில் நிலையங்களில் பண்டிகை காலங்களில்  கண்காணிப்பு பணிகள்  தீவிரப்படுத்தப்படும்.

அந்த வகையில் இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை நெருங்குவதால்  ரயில்வே பாதுகாப்பு படையினர் ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில்  தங்கள் கண்காணிப்பை  தொடங்கியுள்ளளனர். அத்துடன் பயணிகள்  ரயில்களில் பட்டாசு எடுத்துச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளனர். 

இதுகுறித்து, ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறுகையில், "ரயிலில் பட்டாசு உள்ளிட்ட வெடி மருந்து, எரிபொருட்கள் எடுத்துச்செல்ல தடை இருந்து வருகிறது. அப்படி எடுத்துச் செல்வது  சகபயணிகளின்  பயணத்தையும் சீர்குலைத்து விடும் அபாயத்தை ஏற்படுத்தி விடும். எனவே  விதியை மீறி பட்டாசு எடுத்துச் சென்றால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

முதன்முறையாக பிடிப்பட்டால், 1,000 ரூபாய் அபராதம் அல்லது ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கப்படும். தொடர்ந்து, இதுபோன்ற  விதிமீறல்களில் ஈடுபட்டால், மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். தீபாவளி நெருங்கவுள்ள நிலையில், பட்டாசு எடுத்து செல்வதை தடுக்கும் வகையில், 'மெட்டல் டிடெக்டர்' உதவியுடன், பயணியரின் உடமைகளை சோதனை செய்ய உள்ளோம். 

ரயில்களில் பாதுகாப்பான பயணம் குறித்து,  ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் தொடர்ந்து  நடத்த உள்ளோம்" என்று தெரிவித்தனர். 

எனவே பாதுகாப்பான மற்றும்  மகிழ்ச்சியான  ரயில் பயணத்தில் பட்டாசுகளை எடுத்துச் சென்று இக்கட்டான சூழ்நிலைக்கோ அல்லது சிறைத் தண்டனைக்கோ  யாரும்  உள்ளாக வேண்டாம். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in