சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு சரக்கு கப்பல் சேவை: இன்று முதல் தொடக்கம்
சென்னைக்கும் புதுச்சேரிக்கும் இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து சேவை இன்று முதல் தொடங்குகிறது.
சென்னையில் உள்ள ஏராளமான தொழிற்சாலைகளுக்கு உதிரி பாகங்கள் உள்ளிட்டவை கொண்டு வருவதற்கும், சென்னையில் இருந்து தமிழ்நாடு முழுவதும் பொருட்களைக் கொண்டு செல்வதற்கும் தரைவழிப் போக்குவரத்தே பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் சென்னையிலிருந்து திருச்சி, புதுச்சேரி மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசலாகவே இருந்து வருகிறது.
இந்த நிலையை தவிர்க்க புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு சரக்கு கப்பல் சேவை வேண்டும் என்று தொழில் முனைவோர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆழ்வலர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதனை ஏற்று விரைவில் சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று சென்னை புதுச்சேரி இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து சேவை தொடங்குகிறது. வாரம் இருமுறை இந்த சரக்கு கப்பல் போக்குவரத்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை துறைமுக அறக்கட்டளை மற்றும் புதுச்சேரி துறைமுகம் ஆகியவற்றுக்கு இடையே 2017 ம் ஆண்டில் சரக்குகளை கையாளுவதற்கும் வருவாயைப் பகிர்ந்து கொள்வதற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சரக்கு கப்பல் இயக்குவதற்கான பணிகள், துறைமுக அமைப்பு, சரக்குகளை கையாளும் இயந்திரம் போன்றவை வடிவமைக்கப்பட்டு வந்தது.
முதன்முறையாக 67 மீட்டர் நீளமுள்ள சரக்கு கப்பல் சென்னையிலிருந்து புதுச்சேரிக்கும், புதுச்சேரியிலிருந்து சென்னைக்கும் வாரத்தில் இரண்டு முறை இயக்கப்படுகிறது. இந்தச் சேவைகள் பணத்தையும் நேரத்தையும் மிச்சப் படுத்துவதோடு சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் எனவும், சாலை வழியே சரக்குகளை ஏற்றிச் செல்வதை விட கடல் வழியே கொண்டு செல்வதால் 25 சதவீதம் அளவிற்கு பணம் மிச்சமாவதாகவும் கூறப்படுகிறது.