‘ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோதுதான் எனது தொழில் வளர்ச்சியடைந்தது’ - மனம் திறந்த கௌதம் அதானி!

‘ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோதுதான் எனது தொழில் வளர்ச்சியடைந்தது’ - மனம் திறந்த கௌதம் அதானி!

தனது வணிக சாம்ராஜ்யத்தின் வளர்ச்சியை எந்த ஒரு அரசியல் தலைவருடனும் இணைக்க முடியாது என்று தொழிலதிபர் கௌதம் அதானி கூறியுள்ளார். மேலும், அதானி குழுமத்தின் பயணம் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸின் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது தொடங்கியது என்றும் அவர் கூறினார்

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் கௌதம் அதானி இந்தியா டுடேவுக்கு அளித்த பேட்டியில், "பிரதமர் மோடியும் நானும் ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அதுதான் அவரின் உறவால் நான் ஆதாயமடைந்தது போன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு என்னை எளிதாக இலக்காக்குகிறது. இது போன்ற கதைகள் எனக்கு எதிராகத் சொல்லப்படுவது துரதிர்ஷ்டவசமானது.

எங்கள் குழுவின் வெற்றி குறுகிய காலக் கண்ணோட்டத்தால் பாதிக்கப்படுகின்றன. உண்மை என்னவென்றால், எனது தொழில்முறை வெற்றியானது எந்தவொரு தனிப்பட்ட தலைவராலும் நடந்தது அல்ல. மாறாக 30 ஆண்டுகளுக்கும் மேலாக பல தலைவர்கள் மற்றும் அரசாங்கங்களால் தொடங்கப்பட்ட கொள்கை மற்றும் நிறுவன சீர்திருத்தங்களால் தான் இந்த வெற்றி கிடைத்தது” என்றார்

தனது வெற்றிக்கான காரணங்களை பட்டியலிட்ட அதானி, “ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலத்தில், எக்சிம் (ஏற்றுமதி-இறக்குமதி) கொள்கையை முதன்முதலில் தாராளமயமாக்கியபோதுதான் எனது தொழில் வளர்ச்சி தொடங்கியது என்பதை அறிந்து பலர் ஆச்சரியப்படுவார்கள். ஆனால் அப்போது ஒரு தொழிலதிபராக எனது பயணம் தொடங்கவில்லை.

நரசிம்மராவ் மற்றும் மன்மோகன் சிங் ஆகிய இருவரும் பெரும் பொருளாதார சீர்திருத்தங்களை 1991-ல் தொடங்கியது எனக்கு கிடைத்த இரண்டாவது பெரிய உந்துதல். பல தொழில்முனைவோரைப் போலவே நானும் அந்த சீர்திருத்தங்களின் பயனாளியாக இருந்தேன்.

1995- ம் ஆண்டு குஜராத்தின் முதலமைச்சராக பாஜகவின் கேசுபாய் படேல் தேர்ந்தெடுக்கப்பட்டதும், அவர் முந்த்ராவில் தனது முதல் துறைமுகத்தைக் கட்டுவதற்குக் காரணமான கடலோர வளர்ச்சியில் கவனம் செலுத்தியது எனது தொழில் வாழ்க்கையின் மூன்றாவது திருப்புமுனை.

நான்காவது திருப்புமுனையாக 2001ல் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி வளர்ச்சியில் மிகப்பெரிய அளவில் கவனம் செலுத்தினார். அவரது கொள்கைகள் மற்றும் அவற்றின் அமலாக்கம் மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தியது. இன்று, அவரது திறமையான தலைமையின் கீழ், தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் இதேபோன்ற மறுமலர்ச்சியை நாம் காண்கிறோம். ஒரு புதிய இந்தியா இப்போது தன்னை உறுதிப்படுத்திக் கொள்கிறது" என்று கூறினார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனர் திருபாய் அம்பானியால் தான் ஈர்க்கப்பட்டதாகவும் கௌதம் அதானி கூறினார். "இந்தியாவில் வளரும் மில்லியன் கணக்கான தொழில்முனைவோருக்கு திருபாய் அம்பானி உத்வேகம் அளிக்கிறார். எந்த ஆதரவும், ஆதாரமும் இல்லாமல், அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக ஒரு எளிமையான மனிதர் எப்படி உலகத் தரம் வாய்ந்த வணிகக் குழுவை உருவாக்க முடியும் என்பதை அவர் காட்டியுள்ளார். முதல் தலைமுறை தொழில்முனைவோராக, ஒரு எளிமையான தொடக்கத்தைக் கொண்ட நான் அவரால் மிகவும் ஈர்க்கப்பட்டேன்" என்று அவர் கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in