கார் கண்ணாடி உடைக்கப்படும்; பொருட்கள் திருடப்படும்: இந்த உணவகங்களில் சாப்பிட வேண்டாம் என எச்சரிக்கை

கார் கண்ணாடி உடைக்கப்படும்; பொருட்கள் திருடப்படும்: இந்த உணவகங்களில் சாப்பிட வேண்டாம் என எச்சரிக்கை

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சொந்த வாகனத்தில் பயணிப்பவர்கள் தேநீர் மற்றும் உணவுக்காக பெரம்பலூர் பகுதியில் வாகனத்தை நிறுத்த நேரும்போது அங்கு திருட்டுக்கள் அதிகரித்துள்ளதால் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது.

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருப்பவர் பீர் முகமது (54). இவர் மருத்துவரான தனது மனைவியுடன் சென்னை சென்று விட்டு திருச்சி நோக்கி நேற்று இரவு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் உணவருந்துவதற்காக பெரம்பலூர் கல்பாடி பிரிவு அருகில் உள்ள ஒரு உணவகத்தில் தனது காரை நிறுத்திவிட்டு சாப்பிட சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு அவர்கள் இருவரின் செல்போன்கள், கைப்பையில் வைத்திருந்த ஆதார் கார்டு, பேன் கார்டு, மருத்துவ கவுன்சில் அடையாள அட்டை, 2000 ரொக்கம் உட்பட அனைத்தையும் திருடர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதே போல சென்னை பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரான மகேஷ் பாபு (32), தனது நண்பர்கள் நால்வருடன் பட்டுக்கோட்டையில் நடைபெற்ற ஒரு திருமண விழாவிற்கு வந்து புகைப்படம் எடுத்துவிட்டு சென்னை நோக்கி திரும்பி கொண்டு இருந்தார்கள். வழியில் பெரம்பலூர் அருகே உள்ள மங்களமேடு பகுதியில் காரை நிறுத்திவிட்டு சாப்பிடச் சென்றார்கள். திரும்பி வந்து பார்த்தபோது கார் கண்ணாடி உடைக்கப் பட்டு பத்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேமராக்கள், லென்ஸ்கள், மடிக்கணினி, ஹார்டுடிஸ்க் உள்ளிட்ட பொருள்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து அவர்கள் மங்களமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதுபோன்று வாகனங்களில் வருபவர்கள் உணவகத்தில் நிறுத்தும்போது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு காரில் உள்ள பொருட்கள் திருடப்படுவது பெரம்பலூர் பகுதியில் வாடிக்கையாகி இருப்பதால் இந்த வழியாக செல்லும் வாகனங்கள் உணவகத்தில் நிறுத்தும்போது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று போலீஸார் அறிவுறுத்தி உள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in