விபத்தை ஏற்படுத்திவிட்டு டிரைவர் தப்பியோட்டம்: காரை சோதனை செய்த போலீஸார் அதிர்ச்சி

விபத்தை ஏற்படுத்திவிட்டு டிரைவர் தப்பியோட்டம்: காரை சோதனை செய்த போலீஸார் அதிர்ச்சி

கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலை விபத்தில் சிக்கிய காரில் இருந்து திடீரென ஓட்டுநர் இறங்கி தப்பியோடினார். போலீஸார் காரை சோதனை செய்து பார்த்தபோது அதில் ஒரு டன் அளவுக்கான ரேசன் அரிசி இருந்தது.

கேரள மாநிலம் ஐரா பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார். கூலி தொழிலாளி. இவர் நேற்று மாலை மார்த்தாண்டத்தில் உள்ள மேம்பாலத்தில் தன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது கேரளம் நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று சந்தோஷ்குமாரின் பைக்கில் மோதியது. இதில் காயம் அடைந்த சந்தோஷ்குமாரை அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில் சந்தோஷ்குமாரை இடித்த டிரைவர் காரை ஒதுக்கி நிறுத்திவிட்டு தப்பியோடி விட்டார்.

முதலில், விபத்து ஏற்படுத்தியதால் தான் டிரைவர் தப்பியோடி விட்டதாக போலீஸார் நினைத்தனர். தொடர்ந்து அந்தக் காரை சோதனை செய்து பார்த்தபோது, அதில் ஒரு டன் ரேசன் அரிசி இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து காரையும், அரிசியையும் பறிமுதல் செய்த போலீஸார் அரிசியை உணவு கிட்டங்கிக்கு அனுப்பிவைத்தனர். காரை தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். ரேசன் அரிசியை கடத்தும் போது விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய ஓட்டுநரைத் தேடிவருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in