வாட்ஸ் அப் மூலம் திட்டம் தீட்டிய டிரைவர்; 25 லட்சத்துடன் ஓடிய மர்ம நபர்கள்: பதறிய தொழிலதிபர்

வாட்ஸ் அப் மூலம் திட்டம் தீட்டிய டிரைவர்; 25 லட்சத்துடன் ஓடிய மர்ம நபர்கள்: பதறிய தொழிலதிபர்

தொழில் அபிவிருத்திக்காக 25 லட்சம் ரூபாய் கடன் வாங்கிவிட்டு வந்த தொழிலதிபர் உணவகம் ஒன்றில் காரை நிறுத்திய இடைவெளியில் மர்ம நபர் காரில் இருந்த பணத்தை கொள்ளையடித்துவிட்டுத் தப்பியோடினார். இதில் தொழில் அதிபரின் கார் ஓட்டுநரே உடந்தையாக இருந்த சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தூத்துக்குடி புதுகிராமம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணகுமார்(42). இவர் உணவுப்பொருள்களான வெங்காயம் உள்ளிட்டவற்றை தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு ஏற்றுமதி செய்துவருகிறார். இவர் தன் தொழில் அபிவிருத்திக்காக நாகர்கோவிலில் உள்ள தன் நண்பர் ஒருவரிடம் 25 லட்சம் ரூபாய் கடனாகப் பெற்றுவந்தார். இவர் சென்றக் காரை தூத்துக்குடி பி.என்.டி காலனி 7-வது தெருவைச் சேர்ந்த செல்வ சரவண கண்ணன்(25) என்பவர் ஓட்டிச் சென்றார்.

கார், நாகர்கோவிலில் இருந்து நெல்லையைக் கடந்து தூத்துக்குடி சாலையில் சென்றது. அப்போது கே.டி.சி நகர் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் காரை ஒதுக்கினர். அப்போது ஓட்டுநர் சரவண கண்ணன் சாப்பாடு வாங்குவதற்காக இறங்கிச் சென்றார். இந்த இடைவெளியில் திடீர் என காருக்கு அருகில் வந்த மர்மநபர் ஒருவர் 25 லட்சம் ரூபாய் பணப்பையை எடுத்துக்கொண்டு ஓடினார். இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலதிபர் சரவணகுமார் கத்தினார். அப்போது பையைத் தூக்கிக்கொண்டு ஓடிய வாலிபர் தயாராக இருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பியோடினார்.

தொழிலதிபர் சரவணகுமார் கொடுத்த தகவலின் அடிப்படையில் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான், இந்த கொள்ளைச் சம்பவத்தில் கார் ஓட்டுநர் சரவண கண்ணனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. தன் உரிமையாளர் 25 லட்சம் பணத்துடன் வருவதாகவும், ஹோட்டல் வாசலில் ஒதுங்கும் நேரத்தைப் பயன்படுத்தி அதைக் கொள்ளையடித்துச் செல்லுமாறும் தன் நண்பர்கள் இருவரிடம் தெரிவித்துள்ளார். இந்தத் தகவல் பரிமாற்றங்களை வாட்ஸ் அப் கால் மூலம் செய்துள்ளனர். அதன்படிதான் இந்த கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில் ஓட்டுநர் சரவணக்குமாரை கைது செய்த போலீஸார், தப்பியோடிய இருவர் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in