
நாமக்கல்லில் சாலையில் சென்றுகொண்டிருந்த ஆம்னி கார் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமானது. அதில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் சேகர். இவர் மோகனூர் செல்வதற்காக தனது குடும்பத்தை சேர்ந்த 5 பேருடன் அவருக்கு சொந்தமான ஆம்னி காரில் இன்று காலை புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தார். அப்போது நல்லிபாளையம் பகுதியில் காருக்கு கேஸ் நிரப்பிவிட்டு காரை எடுக்க முயன்றபோது கார் இன்ஜின் ஸ்டார்ட் ஆகவில்லை. இதனால் சேகர் காரில் அமர்ந்துகொள்ள அவரது குடும்பத்தினர் காரைத் தள்ளிக்கொண்டு சிறிது தூரம் சென்றனர். அப்போது திடீரென காரின் பின்புறத்தில் இருந்து புகை வந்தது. அதனைத் தொடர்ந்து காரில் தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சேகர் உடனடியாக காரைவிட்டு இறங்கி நாமக்கல் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் அரைமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக சேகர் மற்றும் அவரது குடும்பத்தினர் உயிர் தப்பினர். இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து சேதமானது. இதுகுறித்து நல்லிபாளையம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.