கார், பஸ் நேருக்கு நேர் மோதி கோரவிபத்து: 11 பேர் உடல் நசுங்கி பலி

கார், பஸ் நேருக்கு நேர் மோதி கோரவிபத்து: 11 பேர் உடல் நசுங்கி பலி

மத்தியப்பிரதேசத்தில் காரும், பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 11 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் வேலைக்குச் சென்ற தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் அங்கிருந்து தங்கள் சொந்த ஊரான மத்தியப்பிரதேச மாநிலத்திற்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலை பெதுல் மாவட்டத்தில் வந்து கொண்டிருந்த காலி பேருந்து மீது அவர்கள் சென்ற கார் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது.

இதில் இரண்டு குழந்தைகள், ஆறு ஆண்கள், மூன்று பெண்கள் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். இதில், ஒருவர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த 11 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து போலீஸார் கூறுகையில்," காரில் இருந்து உடல்களை மீட்க அதிக நேரம் ஏற்பட்டது. அடையாளம் காண முடியாத அளவுக்கு அவர்களின் உடல் முற்றிலும் சிதைந்துவிட்டது. இறந்து போனவர்கள் இடம் விட்டு இடம் பெயரும் தொழிலாளர்கள் ஆவர். முதற்கட்ட விசாரணையில்,கார் ஓட்டுநர் தூங்கியதால், பஸ் மீது வாகனம் மோதியதாக கூறப்படுகிறது" என்றனர்.

இந்த கோரவிபத்து தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த 11 பேரின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவருக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in