கோவையில் கார் குண்டு வெடிப்பு வழக்கு: 'மசூரா' கூட்டம் நடத்திய இருவர் கைது

கைது செய்யப்பட்ட சனோபர் அலி, ஷேக் இதயதுல்லா
கைது செய்யப்பட்ட சனோபர் அலி, ஷேக் இதயதுல்லா

கோவையில் கார் குண்டு வெடிப்பு வழக்கில் மேலும் 2 பேரை என்ஐஏ கைது செய்துள்ளது.

கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்த அக்டோபர் 23-ம் தேதி நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார்.

கோவை கார் குண்டு வெடிப்பு
கோவை கார் குண்டு வெடிப்பு

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். உயிரிழந்த ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்த 6 பேரை கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு என்ஐஏவிற்கு மாற்றப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்ட ஆறு பேரும் புழல் சிறைக்கு மாற்றப்பட்டனர். என்ஐஏ அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஜமேஷா முபின் தற்கொலை படை தாக்குதல் மூலம் மத வழிபாட்டு தளத்தை தகர்த்தி அதன் மூலம் மத பிரச்சினைக்கு வழிவகுக்க திட்டமிட்டது தெரியவந்தது.

இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பில் இருந்த நபர்களின் வீடுகளில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு உதவியதாக முகமது தவ்பிக், உமர் பாரூக் மற்றும் பெரோஸ் கான் உள்ளிட்ட மேலும் மூவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 9 நபர்களில் 5 பேரை மட்டும் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏவிற்கு பூந்தமல்லி நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து அவர்களை என்ஐஏ அதிகாரிகள் சம்பவ இடமான கோவைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து மேலும் இரண்டு முக்கிய நபர்களான கோயம்புத்தூரைச் சேர்ந்த ஷேக் இதயதுல்லா மற்றும் சனோபர் அலி ஆகியோரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த பிப்ரவரி மாதம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு அருகேயுள்ள அரசனூர் மற்றும் கடம்பூர் காட்டுப் பகுதிகளில் இவர்கள் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதும், ஏற்கெனவே கைது செய்யபட்ட உமர் பரூக் என்பவரின் தலைமையில் நடைபெற்ற மசூரா ஆலோசனை கூட்டத்தில் உயிரிழந்த ஜமேஷா முபின் மற்றும் கைது செய்யப்பட்ட முகமது அசாரூதின் ஆகியோருடன் சேர்ந்து கலந்து கொண்டது தெரிய வந்தது.

அதில் தீவிரவாத செயல்பாடுகள் தொடர்பாக சதித்தீட்டம் திட்டியது விசாரணையில் தெரியவந்தாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள இருவரும் தீவிரவாதக் கும்பலின் ஒருங்கிணைப்பாளராகவும், கோவையில் வெடிகுண்டு வெடிப்பு தொடர்பாக மசூரா என்ற பெயரில் கூட்டம் நடத்தி சதித்திட்டம் தீட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருவதாக என்ஐஏ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in