
இந்தியாவை காலனித்துவப்படுத்திய பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி மற்றும் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா ஆகியவற்றைப் போல எதிர்க்கட்சிகள் நாட்டின் பெயரை கூட்டணிக்குப் பயன்படுத்துவதன் மூலம் மக்களை தவறாக வழிநடத்த முடியாது என்று பிரதமர் மோடி ‘இந்தியா’ கூட்டணியை விமர்சித்துள்ளார்
பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, எதிர்கட்சிகள் விரக்தியிலும் ஏமாற்றத்திலும் இருப்பதாக குறிப்பிட்டார். மேலும், “பயங்கரவாத நடவடிக்கைகளுக்குக் காரணமான இந்தியன் முஜாஹிதீன் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா போன்ற அமைப்புகளின் பெயரைப் போல எதிர்க்கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு நாட்டின் பெயரை பயன்படுத்தியுள்ளனர். ஆனால் இந்தக் கூட்டணி ஊழல் தலைவர்கள் மற்றும் கட்சிகளின் தொகுப்பு.
ஆங்கிலேயர் ஏ.ஓ.ஹியூம் நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியாக இருக்கும் கட்சிக்கு இந்திய தேசிய காங்கிரஸ் என்று பெயரிட்டார். மக்கள் இப்போது முதிர்ச்சியடைந்துள்ளனர். எனவே இத்தகைய பெயரிடல்களால் அவர்களை தவறாக வழிநடத்த முடியாது.
எதிர்க்கட்சிகள் மிகவும் பொறுப்பற்றவர்களாக மாறிவிட்டதால், பாஜக இன்னும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் கூட்டணி எதிர்மறையான ஊழல் கூட்டணி. தேசிய ஜனநாயக கூட்டணி தூய நோக்கம், தெளிவான கொள்கை மற்றும் தீர்க்கமான தன்மையைக் கொண்டுள்ளது” என்றார்