தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது! கர்நாடகா அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு!

முதல்வர் சித்தராமையா
முதல்வர் சித்தராமையா

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடகா அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா கூறினார்.

நடப்பு ஆண்டில் கடந்த ஜூன் 12ம் தேதி டெல்டா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடகம் வழங்கவில்லை. இதனால் காவிரி டெல்டா பகுதியில் சாகுபடி செய்திருந்த பயிர்கள் கருகின. கடன் வாங்கி சாகுபடி செய்த பயிர்கள் சேதம் அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இதனையடுத்து காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரை திறந்து விடுமாறு பிரதமர் மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். மேலும் காவிரி ஆணைய கூட்டத்திலும் தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர். காவிரி ஆணைய உத்தரவின்படி கர்நாடக அரசு, காவிரியில் தண்ணீர் திறந்து விட்டது.

இந்நிலையில், நேற்று நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தின் தொடக்கத்தில் 4 மாநில அணைகளின் நீர் இருப்பு விவரம், மழை அளவு மற்றும் நீர்ப்பாசன விவரங்கள் சேகரிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 29ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவு பற்றி விவாதிக்கப்பட்டது. அப்போது, காவிரியில் இருந்து தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை நீரின் அளவு குறித்தும், தற்போது தேவைப்படும் மற்றும் அடுத்த மாதத்துக்கு தேவையான நீரின் அளவு குறித்தும் தமிழ்நாடு அதிகாரிகள் பேசினர். தமிழ்நாட்டுக்கு 8 டி.எம்.சி நீர் நிலுவையாக இருப்பதாகவும், நடப்பு மாதம் 36.76 டி.எம்.சி. தண்ணீரை திறக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சித்தராமையா, கடந்த 123 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வறட்சி நிலவுவதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க இயலாது. உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவிடம் முறையிட உள்ளோம். 53 டிஎம்சி நீர் மட்டுமே உள்ளதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக் கூடய சூழல் இல்லை. மழை பற்றாக்குறைவால் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாத நிலையில் உள்ளோம். கர்நாடகத்தின் தேவையை பூர்த்தி செய்யவே 70 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுகிறது" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in