
மாவட்ட ஆட்சியர் கேட்ட வகுத்தல் கணக்கிற்கு தலைமை ஆசிரியை தவறாக பதில் சொல்வதும், அவரை ஆட்சியர் கடிந்து கொள்வதுமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் பாலகாட் மாவட்டத்தில் ஆரம்பப்பள்ளி உள்ளது. அந்த பள்ளிக்கு மாவட்ட ஆட்சியர் கிரிஷ்குமார் மூன்று நாட்களுக்கு முன்பு திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளியின் நிலை, ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்கும் முறை, மாணவர்களின் திறன் உள்ளிட்டவற்றை ஆட்சியர் சோதனை செய்தார்.
அப்போது ஒரு வகுப்பில் தலைமை ஆசிரியை சோனா தர்வே, மாணவர்களுக்கு கணித பாடம் எடுத்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஆட்சியர் கிரிஷ்குமார், மாணவர்களிடம் '411-ஐ 4 ஆல் வகுக்கச் சொல்லியுள்ளார். மாணவர்களுக்கு சரி வர அந்த கணக்குத் தெரியவில்லை. இதனால் தலைமை ஆசிரியரை அதே கணக்கைச் சொல்லி ஆட்சியர் வகுக்கச் சொல்லியுள்ளார். ஆனால், அந்த கணக்கை தலைமை ஆசிரியை சோனா தர்வே, தவறாக செய்துள்ளார். இந்த கணக்கு சரியா என ஆட்சியர் கேள்வி கேட்டுள்ளார். இதனால் தலைமை ஆசிரியை திகைத்துப் போய் நின்றுள்ளார். ஒரு சின்ன கணக்கைக்கூட போடத் தெரியாத நீங்கள் எப்படி மாணவர்களுக்கு சரியாக கற்றுக்கொடுப்பீர்கள் என்று ஆட்சியர் கிரிஷ்குமார் கடிந்து கொண்டார். இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை மூலம் தலைமை ஆசிரியையை பொறுப்பில் இருந்து விலக்கியதோடு, அவரது ஊதிய உயர்வையும் ஆட்சியர் நிறுத்தியுள்ளார். பள்ளியில் தலைமை ஆசிரியையிடம் ஆட்சியர் கணக்கிற்கு விடை கேட்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.