நம்மவர்களைக் கைவிட்டுவிட முடியாது: உக்ரைனிலிருந்து இந்தியர்களை மீட்க ராகுல் கோரிக்கை!

நம்மவர்களைக் கைவிட்டுவிட முடியாது: உக்ரைனிலிருந்து இந்தியர்களை மீட்க ராகுல் கோரிக்கை!

உக்ரைனில் தங்கியிருக்கும் இந்தியர்கள், அதன் அண்டை நாடுகளின் வழியே வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாகவும், எல்லையில் உக்ரைன் காவலர்களால் இந்தியர்கள் தாக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கும் நிலையில், நமது சொந்த மக்களை அரசு கைவிட்டுவிட முடியாது. அவர்களை மீட்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்வீட் செய்திருக்கிறார்.

உக்ரைன் மீது எல்லா பக்கத்திலிருந்தும் தாக்குல் நடத்திக்கொண்டிருக்கிறது ரஷ்யா. போதாக்குறைக்கு ரஷ்யாவின் அண்டை நாடான பெலாரஸும் ரஷ்யாவுக்கு ஆதரவாகப் படைகளை உக்ரைனுக்கு அனுப்பப்போவதாக அறிவித்திருக்கிறது. போர் தொடங்கியதும் வான்வழிப் போக்குவரத்தை உக்ரைன் நிறுத்திவிட்டதால், அந்நாட்டில் இருக்கும் இந்தியர்கள் குறிப்பாக மருத்துவ மாணவர்கள் நில எல்லை வழியாக, உக்ரைன் அருகில் உள்ள ஹங்கேரி, போலந்து உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று அங்கிருந்து விமானம் மூலம் இந்தியா திரும்ப இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. எனினும், உக்ரைன் மக்களும் பிற நாட்டினரும் எல்லைகளில் குவிந்துவருவதால், கூட்டம் அதிகரித்திருப்பதாகவும், உக்ரைனியர்கள் வெளியேற அனுமதிக்கும் அந்நாட்டுக் காவலர்கள் இந்திய மாணவர்களைத் தாக்குவதாகவும் அங்கிருந்து பல மாணவர்கள் தெரிவித்துவருகின்றனர். இதனால், பலரும் மீண்டும் தாங்கள் தங்கியிருக்கும் இடங்களுக்கே திரும்பிச் செல்கின்றனர்.

இந்நிலையில், இந்திய மாணவர்கள் தாக்கப்படுவதாகக் குறிப்பிடப்படும் காணொலியைப் பகிர்ந்து, “இப்படியான வன்முறையால் பாதிக்கப்படும் இந்திய மாணவர்களையும் அந்தக் காணொலிகளைப் பார்க்க நேரும் அவர்களது பெற்றோரையும் நினைத்து என் மனம் வேதனையடைகிறது. எந்தப் பெற்றோருக்கும் இந்த நிலை ஏற்படக் கூடாது” என்று ட்வீட் செய்திருக்கும் ராகுல், “மீட்புத் திட்டங்கள் குறித்து உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் அரசு விரிவான தகவல்களை அளிக்க வேண்டும். நம் சொந்த மக்களை நாம் கைவிட்டுவிட முடியாது” என்றும் கூறியிருக்கிறார்.

உக்ரைனிலிருந்து வெளிவர முடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் இந்திய மணவர்கள், தங்களை மீட்கக்கோரி அரசுக்கு வேண்டுகோள் விடுக்கும் காணொலிகளைக் காங்கிரஸ் தலைவர்கள் பலர் தொடர்ந்து சமூகவலைதளங்களில் பகிர்ந்துவருகின்றனர். இந்தியர்களை உரிய காலத்தில் மீட்க மத்திய அரசு தவறிவிட்டது என்றும் அவர்கள் விமர்சித்துவருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in