உட்கட்டமைப்பு வளர்ச்சி; அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது; நீதிமன்றம் அதிரடி!

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

உட்கட்டமைப்பு தொடர்பான விசயங்களில் அரசின் கொள்கை முடிவுகளில் நில உடமையாளர்கள் தலையிட முடியாது என நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

என்.எல்.சி நிறுவனம்
என்.எல்.சி நிறுவனம்

என்.எல்.சி சுரங்க நீரை வெளியேற்ற புதிய பரவனாற்றுக் கால்வாய் அமைப்பதற்காக, ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்டிருந்த இடத்தில் கடந்த 26ம் தேதி வேலையை தொடங்கியது என்.எல்.சி நிர்வாகம். அதற்காக அந்த நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த விவசாயப் பயிர்கள் ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டு, கால்வாய் தோண்டப்பட்டது.

அதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், போலீஸார் பாதுகாப்புடன் பணியை தொடர்ந்தது என்.எல்.சி. இதையடுத்து என்.எல்.சி நிர்வாகத்துக்கு எதிராக பா.ம.க சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு இதுவரை 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் என்.எல்.சிக்கு நிலத்தை வழங்கிய முருகன் என்பவர், "கடந்த 2007ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்ட என் நிலத்தை இதுவரை என்.எல்.சி சுவாதீனம் எடுக்கவில்லை. அதனால், அதில் நெல் பயிரிட்டிருந்தேன். தற்போது அறுவடைக்கு இரண்டு மாதங்களில் உள்ள நிலையில், பயிர்களை என்.எல்.சி நிர்வாகம் சேதப்படுத்திவிட்டது.

அறுவடைக்கு முன் வயலில் வாய்க்கால் அமைக்கும் என்.எல்.சி
அறுவடைக்கு முன் வயலில் வாய்க்கால் அமைக்கும் என்.எல்.சி

புதிய சட்டத்தின்படி கையகப்படுத்திய நிலங்களை ஐந்து ஆண்டுகள் பயன்படுத்தவில்லை என்றால், நில உரிமையாளர்களிடமே அதை திருப்பித் தர வேண்டும். அதன்படி 2007ல் கையக்கப்படுத்திய எங்கள் நிலத்தையும் என்.எல்.சி நிர்வாகம் பயன்படுத்தாததால் அதை திருப்பித் தர வேண்டும். மேலும் நாங்கள் அறுவடை செய்யும் வரை என்.எல்.சி நிர்வாகம் நிலத்தில் குறுக்கிட தடை விதிக்க வேண்டும்" என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இம்மனுவை கடந்த வாரம் விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, ஆகஸ்ட் 6ம் தேதிக்குள் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கான இழப்பீடாக ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க என்.எல்.சிக்கு உத்தரவிட்டார். இவ்வழக்கை மீண்டும் விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, என்.எல்.சி நிறுவனத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் அறுவடையை முடித்து நிலத்தை ஒப்படைக்க வேண்டும்.

புதிதாக பயிர்கள் ஏதும் பயிரிடக் கூடாது. மீறினால், சட்ட நடவடிக்கைகள் எடுக்கலாம். உட்கட்டமைப்பு வளர்ச்சி தொடர்பான விவகாரங்களில், அரசின் கொள்கை முடிவுகளில் நில உரிமையாளர்கள் தலையிட முடியாது. ரூ.25 லட்சம் இழப்பீடு என்பது 2014க்கு பிறகு கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு மட்டுமே வழங்க முடியும். அதற்கு முன்பாக நிலத்தை கொடுத்தவர்களுக்கு வழங்க முடியாது என நீதிபதி தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in