சோதனைச்சாவடிகளில் தற்காலிக அனுமதிச்சீட்டு ரத்து: இரவு நேரங்களில் ஐயப்ப பக்தர்கள் தவிப்பு

சோதனைச்சாவடிகளில் தற்காலிக அனுமதிச்சீட்டு ரத்து: இரவு நேரங்களில் ஐயப்ப பக்தர்கள் தவிப்பு

சோதனைச் சாவடிகளில் தற்காலிக அனுமதிச்சீட்டு நேரடியாக வழங்கப்பட்டது ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் வாகனங்கள் இரவு நேரத்தில் காத்துக் கிடக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்குச் செல்வதற்கு இருபதுக்கும் மேற்பட்ட போக்குவரத்து சோதனைச்சாவடிகள் தமிழக எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சோதனைச்சாவடிகளில் தற்காலிக வாகன அனுமதிச்சீட்டுகள் பெற்ற பின்பு தான் தமிழக வாடகை வாகனங்கள் மற்றும் இதர மாநில வாகனங்கள் அந்தந்த மாநிலங்களுக்கு செல்வது வழக்கமாக இருந்து வந்தது.

இந்த நிலையில் ஜன.1-ம் தேதி முதல் எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடிகளில் தற்காலிக அனுமதிச்சீட்டு நேரிடையாக பெறுவது நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் தற்காலிக அனுமதி சீட்டுகளை வெளியில் உள்ள கணினி மையங்களில் எடுத்துச் செல்ல வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது சபரிமலை சீசன் காலம் என்பதால் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் வாகனங்கள், மூன்று எல்லைகள் வழியாக கேரளாவிற்குச் சென்று வருகின்றன.

இதனால் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் வாகனங்கள் கேரளாவிற்கு தற்காலிக அனுமதிச்சீட்டைப் பெற்றுசெல்ல முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பகல் நேரங்களில் ஆங்காங்கே அலைந்து திரிந்து ஐயப்ப பக்தர்கள் அனுமதிச்சீட்டு பெற்று சென்று விடுகின்றனர்.

ஆனால், இரவு நேரங்களில் வாகனங்களில் வரும் ஐயப்ப பக்தர்கள் எங்கு அனுமதிச்சீட்டு வாங்க வேண்டும் என்று தெரியாமல் திணறும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு சேர அனைத்து ஐயப்ப பக்தர்கள் வாகனங்கள் உள்ளிட்ட வாடகை வாகனங்கள் தற்காலிக அனுமதிச்சீட்டு பெற முயற்சி செய்வதன் மூலம் இணையதளங்கள் முடங்கி விடுகின்றன. இதனால் பலமணி நேரம் இணையதளம் சரியாகும் வரை காத்திருந்து அனுமதிச் சீட்டு பெறும் சூழலுக்கு வாகன ஓட்டிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக எல்லைப் பகுதிகளில் பல பகுதிகளில் ஆங்காங்கே ஐயப்ப பக்தர்கள் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் சூழல் இரவு நேரங்களில் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இரவு நேரங்களில் உணவு உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் ஐயப்ப பக்தர்கள் தவித்து வருகின்றனர். எனவே, வாகனங்கள் செல்வதற்கு மாற்று ஏற்பாடுகளை சோதனைச் சாவடிகளில் அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in