பிரிட்டனைப் பின்னுக்குத் தள்ளியதில் பெருமை கொள்ளலாமா இந்தியா?

பிரிட்டனைப் பின்னுக்குத் தள்ளியதில் பெருமை கொள்ளலாமா இந்தியா?

உலகப் பொருளாதாரத் தரவரிசைப் பட்டியலில் பிரிட்டனைப் பின்னுக்குத் தள்ளி 5-வது இடத்தை இந்தியா பெற்றிருப்பது பெருமைக்குரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது. அதேசமயம், இந்த இடத்தை 2017-லேயே இந்தியா அடைந்திருக்க முடியும் என்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். அப்படியெனில், இந்தியா இந்த இடத்தை வந்தடைய தாமதம் செய்த காரணி என்ன? இந்தியா எதிர்கொண்டிருக்கும் பிற சவால்கள் என்னென்ன?

பன்னாட்டு நாணய நிதியம் (ஐஎம்எஃப்) சமீபத்தில் வெளியிட்ட உலகப் பொருளாதாரத் தரவரிசைப் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கிறது. சீனா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன. வல்லரசு நாடுகள் அடைந்திருக்கும் இந்த வளர்ச்சி பல ஆண்டுகளாகத் தொடர்வதால், இதில் வியப்பதற்கு எதுவும் இல்லை. எனினும், வளரும் நாடுகளில் ஒன்றான இந்தியா, 3.5 ட்ரில்லியன் டாலர் ஜிடிபி மதிப்புடன் இந்த வரிசையில் 5-வது இடத்துக்கு வந்திருப்பதுதான் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்திருக்கிறது. இதையடுத்து இந்தியாவில் வழக்கம்போல் பெருமித உணர்வு மிகுந்திருக்கிறது. குறிப்பாக, பிரிட்டனின் காலனி ஆதிக்கத்துட்பட்ட நாடுகளில் ஒன்றாக இருந்த இந்தியா, தனது 75-வது சுதந்திர தினத்தைக் கடந்துவிட்ட நிலையில் பிரிட்டனைப் பின்னுக்குத் தள்ளி இந்த இடத்துக்கு வந்திருப்பது வரலாற்றுச் சாதனையாகவே பார்க்கப்படுகிறது. பிரிட்டனின் தற்போதைய பொருளாதார மதிப்பு 3.2 ட்ரில்லியன் டாலர்தான்.

5 ஆண்டுகாலத் தாமதம்

ஆனால், 5 ஆண்டுகள் தாமதமாகத்தான் இந்தியாவுக்கு இந்தப் பெருமை கிடைத்திருக்கிறது என்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். ஆம், 2016-ல் இந்தியாவின் ஜிடிபி மதிப்பு 2.29 ட்ரில்லியன் டாலராக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் பிரெக்ஸிட் காரணமாகப் பெரும் குழப்பத்தைச் சந்தித்த பிரிட்டனின் ஜிடிபி மதிப்பு 2.34 ட்ரில்லியன் டாலராக இருந்தது. அதாவது, அப்போது இரு நாடுகளுக்கும் இடையே வெறும் 50 பில்லியன் டாலர்தான் வித்தியாசம்.

அடுத்த ஆண்டில், இந்தியா பிரிட்டனை முந்திவிடும் என்று அப்போதே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி நடக்கவில்லை. அதற்கு முக்கியக் காரணம் 2016 நவம்பர் 8-ல் பிரதமர் மோடி அறிவித்த பணமதிப்பு நீக்கம்தான் என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்து.

அதுமட்டுமல்ல, வெறுமனே ஜிடிபி வளர்ச்சியை வைத்து ஒரு நாட்டின் பொருளாதார நிலையை மதிப்பிட முடியாது. பல்வேறு காரணிகள் அந்த நிலையை வலுப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். உதாரணத்துக்கு, இந்தியாவின் தனிநபர் வருமானம் 2,500 டாலர்தான். ஆனால், பிரிட்டனின் தனிநபர் வருமானம் 47,000 டாலர்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்

அதேபோல், இந்தியாவின் முக்கியமான போட்டியாளராகக் கருதப்படும் சீனாவின் ஜிடிபி மதிப்பு 19 ட்ரில்லியன் டாலர். இந்தியாவை ஒப்பிட இது பல மடங்கு அதிகம். எனவே, 10 ட்ரில்லியன் டாலர் வளர்ச்சியை நோக்கி இந்தியா நகர வேண்டும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். கூடவே, விவசாயம், உற்பத்தித் துறை போன்றவற்றில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிட்டால், நாம் பல மடங்கு கீழே இருப்பது தெரியவரும்.

இன்றைய தேதியில் இந்தியா குறைந்த - நடுத்தர வருவாய் கொண்ட நாடாகவே கருதப்படுகிறது. இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி தொடர்ந்து 7 முதல் 7.5 சதவீதமாக நீடித்தால் மட்டுமே 2047-ம் ஆண்டுவாக்கில் நடுத்தர வருவாய் கொண்ட நாடாக உயர முடியும். தனிநபர் வருமானமும் 10,000 டாலராக உயர்ந்திருக்கும்.

தவிர வேலைவாய்ப்பின்மை இந்தியா எதிர்கொள்ளும் மிகப் பெரிய பிரச்சினை. இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சியில் தொழிலாளர் பங்கேற்பு 48 சதவீதம். பிரிட்டனில் இது 78 சதவீதம், அமெரிக்காவில் 62 சதவீதம்.

பெருந்தொற்று ஏற்படுத்திய பாதிப்புகளைத் தொடர்ந்து, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் என நமது அண்டை நாடுகள் பொருளாதார ரீதியில் பெரும் சிக்கலை எதிர்கொண்டிருக்கின்றன. இப்படியான சூழலிலும் இந்தியா தாக்குப்பிடித்து நிற்பதும் வளர்ச்சியை நோக்கிப் பயணிப்பதும் ஆரோக்கியமான விஷயங்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அது மட்டும் போதாது என்பதே இந்தப் புள்ளிவிவரங்கள் உணர்த்தும் நிதர்சனம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in