மதுரை சிறைச்சாலைக்குள் கஞ்சா பதுக்கலா?: நான்கு மணி நேரமாக நடந்த ரெய்டு

மதுரை சிறைச்சாலைக்குள் கஞ்சா பதுக்கலா?: நான்கு மணி நேரமாக நடந்த ரெய்டு

மதுரை மத்தியச்சிறைக்குள் கஞ்சா பதுக்கி வைத்துள்ளதாக கிடைத்த தகவலையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் நான்கு மணி நேரமாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மத்தியச்சிறையில் சுமார் 1300-க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் உள்ளனர். இந்த நிலையில், சிறைச்சாலையில் தோட்டவேலை செய்யும் சிறைவாசி ஒருவர், வெளிநபர்களிடமிருந்து கஞ்சா வாங்கி வந்து, சிறைவாசிகளுக்கு பொட்டலங்களாக விற்பனை செய்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதன் தொடர்ச்சியாக மதுரை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் விதிகளை மீறி தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள், புகையிலை, சிகரெட், செல்போன் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து மதுரை மாநகர காவல் துணை ஆணையர் சீனிவாச பெருமாள் தலைமையில் உதவி ஆணையர்கள் சுவாதி, ரவீந்திரபிரசாத், சண்முகம், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் நான்கு மணி நேரமாக இன்று சோதனையில் ஈடுபட்டனர்.

மதுரை மத்தியச்சிறையில் உள்ள பெண் சிறைவாசிகள் பிரிவு உட்பட 1300-க்கும் மேற்பட்ட சிறைவாசிகளின் அறைகள் மற்றும் வளாகங்கள், உணவு தயாரிக்கும் பகுதி, சிறை அலுவா்கள் பயன்படுத்தப்படும் அறைகள் , உணவுக்கூடம், கழிவறை, தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த சோதனை நடைபெற்றது.

மகளிர் சிறையில் மகளிர் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் தடை செய்யப்பட்ட பொருட்கள், செல்போன் சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மதுரை மத்திய சிறைச்சாலைக்குள்ளேயே கஞ்சா பதுக்கலா என நடத்தப்பட்ட சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in