
சென்னை தனியார் வங்கியில் கொள்ளை போன நகைகளுக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளதால் நகை கிடைக்காவிட்டாலும், அடகுவைத்த வாடிக்கையாளர்களுக்கு உரியஇழப்பீடு வழங்கப்படும் என வங்கி தரப்பு அறிவித்துள்ளது.
சென்னை அரும்பாக்கம் பெடரல் வங்கியின் கிளை நிறுவனமான பெட் பேங்க் கோல்டு லோன்ஸ் வங்கியில் நேற்று நண்பகல் கொள்ளைச் சம்பவம் நடந்தது. இந்நிறுவனத்தில் சென்னைவாசிகள் பலரும் தங்க நகையை அடகுவைத்துக் கடன் பெற்றுள்ளனர். இந்த வங்கியிலேயே வாடிக்கையாளர் சேவை மையத்தில் மேளாளராக பணிசெய்த முருகன் என்பவர் சூர்யா, பாலாஜி என்ற தன் இரு நண்பர்களையும் பயன்படுத்தி கொள்ளையடித்தது தெரியவந்தது.
இந்தக் கும்பல் வங்கிக் காவலாளிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, வங்கி ஊழியர்கள், மேலாளரைக் கத்தியைக் காட்டி மிரட்டிக் கட்டிப்போட்டு இந்த கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியது.
மூன்றுபேர் கொண்ட இந்த கொள்ளைக் கும்பல் வங்கியில் இருந்து 32 கிலோ நகைகளை எடுத்துச் சென்றது. இவற்றின் மதிப்பு 20 கோடியாகும். இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் கைதுசெய்ய நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இச்சம்பவம் குறித்து வாடிக்கையாளர்களுக்கு விளக்கம் அளித்திருக்கும் வங்கியின் உயர்மட்ட அதிகாரிகள், “இந்த கொள்ளைச் சம்பவத்தில் மூன்று குற்றவாளிகளும் கைதுசெய்யப்பட்டு நகைகள் அனைத்தும் மீட்கப்பட்ட பின்பு, வாடிக்கையாளர்கள் எவ்வளவு நகை அடகு வைத்திருந்தார்களோ அதே அளவுக்கு பிரித்துக் கொடுக்கப்படும். நகைகள் கிடைக்காத பட்சத்தில் வங்கியில் இருக்கும் நகைகள் அனைத்தும் காப்பீடு செய்யப்பட்டுள்ளன. அதனால் காப்பீட்டுத் தொகையை இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து வசூலித்து, நகை அடகுவைத்த வாடிக்கையாளர்களுக்கு வழங்குவோம் ” என்று தெரிவித்துள்ளனர்.