கரைசேரத் துடிக்கும் காங்கிரஸ்: கடைசி முயற்சி கைகொடுக்குமா?

கரைசேரத் துடிக்கும் காங்கிரஸ்: கடைசி முயற்சி கைகொடுக்குமா?

சமீபகாலமாக காங்கிரஸ் கட்சியில் முக்கியமான மாற்றங்கள் நிகழத் தொடங்கியிருக்கின்றன. ஒருபக்கம், உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதிலும் உட்கட்சித் தேர்தலை நடத்துவதிலும் முனைப்பு காட்டப்படுகிறது. இன்னொரு பக்கம், பிரசாந்த் கிஷோர் துணையுடன் தேர்தலை எதிர்கொள்வது குறித்த பரிசீலனையிலும் கட்சித் தலைமை இறங்கியிருக்கிறது. அந்த வகையில் உச்சி முதல் பாதம் வரை மாற்றம் செய்ய உத்தேசித்திருக்கிறது இந்தியாவின் பழம்பெரும் கட்சி!

கடந்த சில ஆண்டுகளாகவே காங்கிரஸ் கட்சியின் சரிவு குறித்து ஜி-23 தலைவர்கள் வெளிப்படையாக விமர்சித்துவந்தனர். உட்கட்சித் தேர்தலை நடத்த வேண்டும்; கட்சிக்கு நிரந்தரத் தலைவரை நியமிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இன்னொரு பக்கம், காங்கிரஸ் கட்சியின் தொடர் தோல்விகள் ஜனநாயகத்துக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் பேசியும் எழுதியும் வந்தனர். காங்கிரஸ் தலைமையோ அதற்கெல்லாம் கொஞ்சம்கூட அசைந்துகொடுக்கவில்லை. எனினும், 5 மாநிலத் தேர்தலில் கிடைத்த பலத்த அடி, கட்சித் தலைமையை ரொம்பவே யோசிக்கவைத்துவிட்டது. இந்த ஆண்டின் இறுதியில் இமாசல பிரதேசம், குஜராத் மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்கள், அடுத்த ஆண்டில் மத்திய பிரதேசம், கர்நாடகம், தெலங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட 9 மாநிலங்களில் காத்திருக்கும் தேர்தல்களுடன், 2024 மக்களவைத் தேர்தலும் காங்கிரஸ் கட்சிக்குப் பெரும் சவாலை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், இனியாவது மீண்டுவர வேண்டும் எனும் எண்ணம் காங்கிரஸ் கட்சிக்கு உதித்திருக்கிறது.

செயலி மூலம் சேர்க்கப்பட்ட உறுப்பினர்கள்

கட்சியில் புதிய உறுப்பினர்களை அதிக அளவில் சேர்ப்பது எனப் பல மாதங்களுக்கு முன்பே தீர்மானிக்கப்பட்டது. மிஸ்டு கால் மூலம் உறுப்பினர்களைச் சேர்ப்பதில் பாஜக முனைப்பு காட்டியது. காங்கிரஸ் கட்சி ஒருபடி மேலே சென்று இணையம் மூலம் அந்தப் பணிகளை முன்னெடுத்தது. அதற்காகச் செயலி உருவாக்கப்பட்டு உறுப்பினர் சேர்க்கை நடந்தது. செயலியில் தங்கள் பெயரைப் பதிவுசெய்ய விரும்புபவர்கள் தங்கள் செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிட வேண்டும். அவர்களது எண்ணுக்கு வரும் ஓடிபி மூலம் சேர்க்கை விண்ணப்பம் உறுதிசெய்யப்படும். தகவல்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர் சம்பந்தப்பட்ட நபர் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக உறுதிசெய்யப்படுவார். பாஜக அரசின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்திருக்கும் இளைஞர்கள், இல்லத்தரசிகள் காங்கிரசில் இணைய முன்வருவார்கள் என அக்கட்சித் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்திருந்தனர். இதற்காக மக்களை நேரடியாக அணுகி ஆதரவு திரட்டவும் முடிவுசெய்யப்பட்டிருந்தது.

கடந்த நவம்பர் தொடங்கி இதுவரை 2.6 கோடி புதிய உறுப்பினர்களைச் சேர்த்திருப்பதாகக் காங்கிரஸ் கட்சி தெரிவித்திருக்கிறது. 5 லட்சம் காங்கிரஸ் தொண்டர்கள் வீடுவீடாகச் சென்று இத்தனை பேரைக் கட்சியில் சேர்த்திருப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்திருக்கிறார். செயலியின் மூலம் சோனியா காந்தி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி போன்றோரும் தங்களை உறுப்பினர்களாகப் பதிவுசெய்திருக்கிறார்கள். இதில்லாமல் வழக்கமான முறையிலும் உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது.

இணையம் மூலம் தேர்தல்

இணையம் மூலமாகவே உட்கட்சித் தேர்தலை நடத்தவும் காங்கிரஸ் திட்டமிட்டிருக்கிறது. புதிதாக 50 பேரைக் கட்சியில் சேர்ப்பவர்கள் காங்கிரஸ் கமிட்டி (ஏஐசிசி), பிரதேச காங்கிரஸ் கமிட்டி (பிசிசி) ஆகியவற்றில் உறுப்பினராக முடியும். பிரதேச காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள். காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள், கட்சியின் செயற்குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்வார்கள். ஏஐசிசி, பிசிசி உறுப்பினர்கள் அனைவரும் இணையம் மூலம் நடத்தப்படும் தேர்தல் வழியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு அதிகம் என்றாலும், இப்படியான முயற்சியைக் காங்கிரஸ் முன்னெடுத்திருப்பது வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 20-க்குள் நடத்தப்படும் என்றும், அக்டோபர் மாதம் செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்ட கமிட்டி தலைவர்கள், துணைத் தலைவர்கள், பொருளாளர்களுக்கான தேர்தல் ஜூன் 1 முதல் ஜூலை 20-க்குள் நடத்தப்படும். பிசிசி-க்கான தேர்தல் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 22 வரை நடத்தப்படும்.

மீண்டும் பிரசாந்த் கிஷோர்

தேர்தல் வியூகங்களை வகுப்பதில் புகழ்பெற்ற ‘ஐ-பேக்’ நிறுவனர் பிரசாந்த் கிஷோரின் யோசனைகளைக் கேட்க காங்கிரஸ் தலைமை முன்வந்திருப்பது இன்னொரு முக்கிய விஷயம். இதற்கு முன்னர் பிரசாந்த் கிஷோருடனான சந்திப்புகள் காங்கிரசுக்குப் பெரிய அளவில் உத்வேகம் தரவில்லை. கட்சியில் அவர் இணையலாம் எனத் தகவல்கள் வெளியான நிலையில், அதுவும் கைகூடவில்லை. இந்த முறை கட்சித் தலைவர் சோனியா காந்தியே அவரது யோசனைகளுக்குச் செவிமடுத்திருக்கிறார். மூன்று பேர் கொண்ட கமிட்டியும் அமைக்கப்பட்டிருக்கிறது. 4 நாட்களில் 3 முறை காங்கிரஸ் தலைவர்களுடன் பிரசாந்த் கிஷோர் நடத்திய பேச்சுவார்த்தை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.

2014 மக்களவைத் தேர்தலின்போது தேநீர் கடையில் அமர்ந்து மோடி உரையாடியது (‘சாய் பே சர்ச்சா’), ஹோலோகிராம் தொழில்நுட்பத்தின் மூலம் ஒரே நேரத்தில் வெவ்வேறு மேடைகளில் மோடியின் உருவத்தைத் தோன்றச் செய்தது என பிரசாந்த் கிஷோரின் அணி புத்தாக்கச் சிந்தனையுடன் உருவாக்கிய வியூகங்களை யாரும் மறந்துவிட முடியாது. காங்கிரஸுக்கு இன்றைய முக்கியத் தேவை அந்தப் புத்தாக்கச் சிந்தனைதான்.

மக்களை மத ரீதியாகப் பிளவுபடுத்தும் முயற்சிகளில் பாஜக தலைவர்கள் இறங்குவதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் பிரசாந்த் கிஷோர், அதை முன்வைத்து அனைத்துத் தரப்பினருக்குமான அரசியல் கட்சியான காங்கிரசைப் பலப்படுத்த முடியும் என நம்பிக்கையூட்டியிருக்கிறார். காங்கிரஸ் மிகச் சிறந்த கட்சிதான் என்றாலும் அதன் சிறப்புகளை மக்களிடம் கொண்டுசெல்வதில்தான் தேக்கம் ஏற்பட்டிருக்கிறது என்பது பிரசாந்த் கிஷோரின் வாதம். உத்தர பிரதேசம், பிஹார் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும் என்றும், தமிழகம், ஆந்திர பிரதேசம், தெலங்கானா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் கூட்டணி அமைத்துக் களம் காண வேண்டும் என்றும் யோசனை தெரிவித்திருக்கிறார் பிரசாந்த் கிஷோர். மக்களவையில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில், வெற்றிபெறும் வாய்ப்புள்ள 370-ல் மட்டும் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் எனும் யோசனையையும் அவர் முன்வைத்திருக்கிறார்.

மறுபுறம், பிரசாந்த் கிஷோரின் வரவை ஜி-23 தலைவர்களும் கசப்புடன் தான் கவனித்துவருகின்றனர். அக்குழுவிலிருந்து வெளியேறிவிட்ட வீரப்ப மொய்லி பிரசாந்த் கிஷோரின் உதவியைக் காங்கிரஸ் கட்சி நாடுவதை வரவேற்றிருக்கிறார். ஜெய்ராம் ரமேஷ் போன்ற தலைவர்கள் பிரசாந்த் கிஷோரின் யோசனைகளை வரவேற்றாலும் திக் விஜய் சிங், ஏ.கே.அந்தோணி போன்ற பல தலைவர்கள் அதிருப்தியுடன் தான் இருக்கிறார்கள். முதலில் சட்டப்பேரவைத் தேர்தல்களில் எதையேனும் அவர் சாதித்துக்காட்டட்டும் என்றும் சில தலைவர்கள் கருதுகிறார்கள்.

சாதக பாதகங்கள்

கட்சியில் எந்தப் பொறுப்பையும் எதிர்பார்க்கவில்லை என பிரசாந்த் கிஷோர் தெரிவித்தாலும், காங்கிரஸ் துணைத் தலைவர் பதவி வேண்டும் என அவர் கேட்டது உண்மை என்றே தெரிகிறது. சோனியா காந்திக்கு மட்டுமே விளக்கம் அளிக்கும் அளவுக்குத் தனக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என பிரசாந்த் கிஷோர் விரும்புகிறார் என்கிறார்கள் இரண்டாம் மட்டத் தலைவர்கள்.

பொதுவாக, யோசனைகளுக்குக் காதுகொடுக்கும் பழக்கம் காங்கிரஸ் தலைமைக்குக் கிடையாது. இனி இழப்பதற்கு எதுவும் இல்லை எனும் நிலையில்தான் இறங்கிவந்திருக்கிறது காங்கிரஸ் தலைமை. பிரசாந்த் கிஷோர் தேர்தல் வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடியவர் என்றாலும், தேர்தலை எதிர்கொள்ளும் விஷயத்தில் அரசியல் கட்சிகளுக்குள் அவர் ஏற்படுத்தும் மாற்றங்கள், பரிந்துரைக்கும் யோசனைகள் அந்தந்தக் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தத் தவறுவதில்லை. பெரும்பாலும் ஐ-பேக் நிறுவனத்தின் யோசனைகளால் இரண்டாம் கட்டத் தலைவர்கள் கோபமடைந்து தலைமையிடம் முறையிடுவது உண்டு. கட்சி அமைப்பு ரீதியிலும் மாற்றங்களை பிரசாந்த் கிஷோர் பரிந்துரைப்பது பல முறை சர்ச்சையாகியிருக்கிறது. திமுகவிலும் இந்த சர்ச்சை வெடித்து அடங்கியதை மறுப்பதற்கில்லை. எந்தக் கட்சிக்காகப் பணிபுரிந்தாலும் அந்தக் கட்சியின் தலைமைக்கு நெருக்கமானவராகவே கிஷோர் இருப்பார்.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் தலைவர்கள் தங்களது தனிப்பட்ட செல்வாக்கு மீதும் நம்பிக்கை கொண்டவர்கள். பிரசாந்த் கிஷோர் பிறப்பிக்கும் ‘உத்தரவுகள்’ அவர்களால் எப்படி எடுத்துக்கொள்ளப்படும் என்பது முக்கியம். சட்டப்பேரவைத் தேர்தல்களில் இதன் விளைவுகள் தென்படும். இதற்கிடையே, எந்த நிபந்தனையும் இல்லாமல் கட்சியில் சேர பிரசாந்த் கிஷோர் முன்வந்திருப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் தாரிக் அன்வர் தெரிவித்திருக்கிறார். பிரசாந்த் கிஷோர் தேர்தல் வியூகம் வகுப்பதைவிடவும் கட்சியில் சேர்வதையே விரும்புவதாக அவர் கூறியிருக்கிறார்.

தேர்தல் வியூக வகுப்பாளராக வெற்றிகரமாகச் செயல்பட்டிருந்தாலும், அரசியல் தலைவர் எனும் முறையில் பிரசாந்த் கிஷோர் எதையும் சாதித்துவிடவில்லை. ஐக்கிய ஜனதா தளத்தில் அங்கம் வகித்த அவரால், அரசியலில் பெரிய அளவில் பரிமளிக்க முடியவில்லை. எனவே, காங்கிரஸ் கட்சிக்கு அவர் வெளியிலிருந்து உதவுவதுதான் ஓரளவுக்குப் பலனளிக்கும். கட்சியில் இணைவதால் பெரிய பலன்கள் ஏற்படாது என்றே கருதப்படுகிறது.

மிகப் பெரிய மாற்றம் தேவை

மோடியை எதிர்கொள்ளும் தலைவராக ராகுல் காந்தியை முன்வைப்பாரா கிஷோர் அல்லது வேறு யாரையும் பரிந்துரைப்பாரா என்பதும் முக்கியமான கேள்வி. பாஜகவுக்கு எதிரான சக்தியாகத் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள ஆம் ஆத்மி கட்சி முயற்சிக்கிறது. அக்கட்சி வைப்பது அகலக்கால்தான் என்று தெரிந்தாலும், குறைந்தபட்சம் பாஜக எதிர்ப்பு வாக்குகள் காங்கிரசுக்குக் கிடைக்காமல் போகும் வாய்ப்பும் இருக்கிறது. மூன்றாவது அணி முயற்சிகளில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் போன்றோர் ஈடுபட்டிருக்கின்றனர். இந்நிலையில், விட்டேத்தியான போக்கை மாற்றிக்கொள்ளாமல் எதையும் சாதிக்க முடியாது என்பதைக் காங்கிரஸ் தலைமை நன்றாகவே உணர்ந்துவிட்டது. பாஜக தீவிரமாக முன்னெடுத்திருக்கும் இந்துத்துவ அரசியலை எதிர்கொள்ள காங்கிரஸிடம் தெளிவான தேர்தல் வியூகம் அவசியம்.

R_V_Moorthy

ஜி-23 தலைவர்கள் உட்பட, காங்கிரஸ் கட்சியின் பல தலைவர்கள், மக்கள் பிரச்சினைகளில் களமிறங்கிப் போராடுவது அரிதாகிவிட்டது. ட்வீட் செய்துகூட தங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்வதில்லை. காங்கிரஸ் தலைமையில் மட்டும் மாற்றங்களை மேற்கொள்வது பெரிய அளவில் பலன் தராது. அமைப்பு ரீதியாகவும், செயல்பாடு ரீதியாகவும் மிகப் பெரிய மாற்றம் தேவை. பிரசாந்த் கிஷோர் முன்வைத்த யோசனைகள் அதற்கெல்லாம் வலுசேர்க்குமா எனத் தெரியவில்லை.

ஜனநாயகம் தழைக்க வேண்டுமென்றால், குறைந்தபட்சம் வலுவான எதிர்க்கட்சி ஒரு நாட்டுக்கு அவசியம். காங்கிரஸ் அந்த இடத்தையாவது அடையுமா எனப் பார்க்கலாம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in