
ஆட்டோவில் ஏறிய பயணியைத் தாக்கி ஆட்டோ ஓட்டுநரே பணத்தை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்புக் காலணியைச் சேர்ந்தவர் அப்துல் கனி. இவரது மகன் அப்துல் நாசர்(21). இவர் வில்லாபுரம் பகுதியிலேயே கார்மென்ட்ஸ் நடத்திவருகிறார். நேற்று இரவு இவர் வெளியூர்களுக்கு பொருள்கள் சப்ளை செய்த பணத்தை வசூலித்துவிட்டு மதுரை மாட்டுத்தாவணிக்கு பேருந்தில் வந்து இறங்கினார். அங்கிருந்து வீட்டுக்குச் செல்ல ஆட்டோ பிடித்துச் சென்றார்.
அப்போது அவரிடம் பணம் இருப்பதை தெரிந்துகொண்ட ஆட்டோ ஓட்டுநர் ஆட்டோவை இருள் சூழ்ந்த பகுதியில் நிறுத்திவிட்டு அப்துல் நாசரிடம் பணத்தைத் தன்னிடம் தருமாறு மிரட்டினார். ஆனால் அப்துல் நாசர் தரவில்லை. இதனால் கோபமடைந்த ஆட்டோ ஓட்டுநர் அவரைத் தாக்கத் தொடங்கினார். இதில் கீழே விழுந்த அப்துல் நாசரின் பாக்கெட்டில் இருந்து 17,500 ரூபாயை எடுத்துக்கொண்டு ஆட்டோ ஓட்டுநர் தப்பியோடினார். காயங்களுடன் விழுந்துகிடந்த அப்துல் நாசரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இதுதொடர்பான புகாரைப் பெற்றுக்கொண்ட காவல் துறையினர் பேருந்து நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஆய்வு செய்தனர். அதில் ஆட்டோ ஓட்டுநர் வில்லாபுரம், வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பொன்.அருள் என்பது தெரியவந்தது. போலீஸார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். பயணிக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய ஆட்டோ ஓட்டுநர் செய்த செயல் மதுரை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.