1880 முதல் 2015 வரையிலான நவீன கேமராவை பார்க்கலாம்: உதகையில் பிரமிக்க வைக்கும் அருங்காட்சியகம்!

1880 முதல் 2015 வரையிலான நவீன கேமராவை பார்க்கலாம்: உதகையில் பிரமிக்க வைக்கும் அருங்காட்சியகம்!

உலக புகைப்பட தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. பல பக்க வார்த்தைகளை ஒரு புகைப்படம் உணர்த்திவிடும். இதனால், உலகம் முழுவதும் புகைப்படத்துக்கு தனிச் சிறப்பு உண்டு. செல்ஃபி வந்துவிட்ட பின்னர், சாமானிய மனிதர்களுக்குக் கூட புகைப்பட ஆர்வம் மேலோங்கியுள்ளது. புகைப்படம் எடுக்க தேவைப்படும் கேமராக்களுக்காக பிரத்யேகமாக உதகையில் தனியார் கேளிக்கைப் பூங்காவில் நிரந்தரமாக ஒரு கேமரா கண்காட்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது. 1880-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரையிலான நவீன கேமரா வரை 2,500-க்கும் மேற்பட்ட கேமராக்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இரண்டாவது உலகப்போரின்போது, போர்முனையில் பயன்படுத்தப்பட்ட ஜப்பான் நாட்டில் உருவாக்கப்பட்ட மிஷின் கன் வடிவிலான மூவி கேமரா வைக்கப்பட்டுள்ளது. இது வேறு எங்கும் காண முடியாதது. கேமராக்கள் பயன்பாட்டுக்கு வந்தபோதே, உளவு பார்ப்பதற்கான ஸ்பை கேமராக்களும் உருவாக்கப்பட்டுவிட்டன. ஜேம்ஸ்பாண்டு திரைப்படங்களில் பார்த்துள்ள பிஸ்டல் வடிவிலான கேமரா, சிகரெட் லைட்டர், கைக்கடிகாரம் ஆகியவற்றில் இணைக்கப்பட்டுள்ள கேமராக்களும் இங்குள்ளன. அதேபோல், லண்டன் தயாரிப்பான ஒரே கிளிக்கில் ஸ்டாம்பு அளவிலான 15 படங்களை எடுக்கும் ராயல் மெயில் ஸ்டாம்ப் கேமரா, அமெரிக்க தயாரிப்பான பெட்ரோமாக்ஸ் விளக்கு வடிவிலான புரொஜக்டருடன் கூடிய கேமரா உள்ளிட்டவை வேறு எங்குமே காண முடியாதவை. இந்த கேமராக்களோடு அமெரிக்காவின் தயாரிப்பான 35 எம்.எம். மூவி கேமராவான மிச்சல் திரைப்படக் கேமராவும் உள்ளது. இவை மர்மயோகி, நாடோடி மன்னன் போன்ற திரைப்படங்களைப் படமாக்கியவை. இவற்றின் பழமை மாறாமல் பாதுகாக்க தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அருங்காட்சியக நிர்வாகி பாபு கூறும்போது, ``இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள கேமராக்களுடன், உலகின் மிகப்பெரிய கேமராவான 17 அடி நீளமுள்ள மாமூத் கேமராவின் மாதிரி அமைக்கப்பட்டுள்ளது. இயங்கும் நிலையிலுள்ள இந்த கேமராவிலிருந்து புகைப்படம் எடுத்து தரும் அளவுக்கு வசதி உள்ளது. இதுபோன்ற அம்சங்கள் இங்கு வரும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளைவிட, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அதிக அளவில் கவர்ந்து வருகிறது'' என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in